ஸ்டார்


இளன் இயக்கத்தில் கவின் நடித்துள்ள ஸ்டார் (Star Movie) படம் கடந்த மே 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியது. அதிதி போங்ஹர், ப்ரீத்தி முகுந்தன், லால், கீதா கைலாசம் என பலரும் நடித்துள்ள நிலையில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சிறு வயது முதலே நடிப்பின் மீது தீராக்காதல் கொண்ட சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த ஒருவன், நடிப்பில் அவன் சாதிக்க கிடைத்த ஒரு முக்கியமான வாய்ப்பின்போது சந்திக்கும் விபத்து அவன் வாழ்வை எப்படி திருப்பி போடுகிறது ? அந்த விபத்தில் இருந்து மீண்டு அவன் சினிமாவில் நடிகனாக , ஸ்டாராக கோலாச்சினானா? என்பதே படத்தின் கதை. 


ஸ்டார் படத்தின் மூன்று நாள் வசூல்






டிரைலர் வெளியானது முதலே ஸ்டார் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்து வந்தது. திரையரங்குகளில் வெளியாகிய ஸ்டார் முதல் நாளிலேயே 3 கோடி வரை வசூல் செய்தது. இதனை அடுத்த இரண்டு விடுமுறை நாட்களில் ஸ்டார் படத்தின் வசூல் இரு மடங்காக அதிகரித்துள்ளது. மொத்தம் மூன்று நாட்களில் ஸ்டார் படம் 15 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டுள்ளது. 


இயக்குநர் இளன்  


ஸ்டார் படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பிற்கும் ரசிகர்கள் இப்படத்திற்கு கொடுத்திருக்கும் அன்பிற்கு இப்படத்தின் இயக்குநர் இளன் தனது எக்ஸ் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ”ஸ்டார் முதல் நாள் காட்சியில், முகம் அறியா சகோதரன் ஒருவன் ஓடி வந்து கேட்டான் : உங்கள கட்டி புடிச்சுக்கலாமா ? அந்த இரு கணம் அன்பு மட்டுமே வெளிப்பட்டது. ஓர் கணவனும் மனைவியும், திரையரங்கை விட்டு விலகவே இல்லை. தேம்பி தேம்பி அழுதாள், நானும் அழுதேன் .அந்த கண்ணீரும் அன்பே. திரையரங்கை சுத்தம் செய்யும் பணி பெண், கன்னத்தை பிடித்து சுத்திப்போட்டது என் தாயின் அன்பை வெளிப்படுத்தியது. பல இடங்களில் கைதட்டலும், கரகோஷமும் "லவ் யூ" என்று சொல்வதாகவே தோன்றியது இறுதிக்காட்சியின் வரவேற்பு என்னுள் உள்ள எழுத்தாளனை இன்னும் தைரியசாலியாக மாற்றியுள்ளது.


ரோலிங் கிரெடிட்ஸ் போட்டவுடன் எழுந்து செல்வதே வழக்கம். ஆனால், நான் கண்டதோ காதலியை விட்டு பிரிந்து செல்ல மனமில்லாத காதலர்களைத்தான். ஒரு சில [ பல ] விமர்சனங்கள், நான் ஒரு கலைஞனாய் மெருகேற உதவுகிறது. நம்பிக்கைக்கு நன்றி . கூட்டம் அலைமோதுகிறது . பகலிலும், மதியத்திலும், இரவிலும் சிலரின் கனவிலும் ஸ்டார் ஒளிர்கிறது .
- அன்புடன் இளன்“ என்று கூறியுள்ளார்