Andhra Assembly Election: ஆந்திராவில் வாக்குப்பதிவின் போது ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., ஒருவரை, வாக்காளர் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
எம்.எல்.ஏவை அறைந்த வாக்காளர்:
ஆந்திராவில் நாடாளுமன்ற மக்களவை தேர்தலுடன், சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவும் இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதேநேரம், பல இடங்களில் ஒய்.எஸ். ஆர். காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகிகள் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த நிலையில் வாக்குச்சாவடியில், எம்,எல்.ஏ., ஒருவரை வாக்காளர் அறைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வரிசையில் நிற்காத எம்.எல்.ஏ.,..
குண்டூர் தொகுதியைச் சேர்ந்த தெனாலி ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., சிவகுமார் தனது பகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்கு வாக்களிக்கச் சென்றுள்ளார். அப்போது வரிசையில் நிற்காமல் நேரடியாக வாக்குச்சாவடிக்குள் செல்ல முயன்றுள்ளார். இதை கண்டதும், நீண்ட நேரமாக வரிசையில் காத்திருந்த ஒருவர், நீங்களும் வரிசையில் நின்று வாக்களியுங்கள், நாங்கள் நீண்ட நேரமாக காத்திருக்கிறோம் என வலியுறுத்தியுள்ளார்.
இதனால் கோபமடைந்த வாக்காளர் கன்னத்தில் அறைந்துள்ளார். நொடி நேரமும் தாமதிக்காத அந்த வாக்காளர், உடனடியாக ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., என்றும் தயங்காமல் சிவக்குமாரை கன்னத்தில் அறைந்துள்ளார். இதை கண்டதும் அவரது ஆதரவாளர்கள் மொத்தமாக திரண்டு, அந்த குறிப்பிட்ட வாக்காளரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. தெலுங்கு தேசம் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். நியாயத்தை கேட்டால் பொதுமக்களை தாக்குவதா? சிவக்குமாரை கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.
எம்.பி., மீது தாக்குதல்:
என்டிஆர் மாவட்டம் கம்பம்பாடு என்ற இடத்தில் வாக்குச் சாவடிகளைப் பார்வையிடச் சென்ற, தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த விஜயவாடா எம்பி வேட்பாளர் கேஷினேனி சின்னி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் நிர்வாகிகளால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அவர் வந்த கார்கள் மீதும் கற்கள் வீசப்பட்டதாக கூறப்படுகிறது..
YCP கட்சியினர் திட்டமிட்டு தாக்குதல்களை மேற்கொள்வதாகவும், ஆனால் போலீசார் அவர்களைத் தடுக்க முயற்சிக்கவில்லை எனவும் கேசிநேனி சின்னி குற்றம்சாட்டியுள்ளார். மேலும், “மக்கள் ஆதரவு இல்லை, தோற்கப்போகிறோம் என்பதை உணர்ந்து தான் அவர்கள் இதுபோன்ற தாக்குதல்களை நடத்துகிறார்கள் என்றனர். இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. காவல்துறை அனைத்து மக்களுக்கும் வாக்களிக்க சம வாய்ப்பு வழங்க வேண்டும். இதுபோன்ற விஷயங்களை தேர்தல் ஆணையம் கவனிக்க வேண்டும்” என்று கேசிநேனி சின்னி வேண்டுகோள் விடுத்துள்ளார்.