பிரம்மாண்டம் என்ற சொல்லிற்கு பெயர் போன திரைப்படம் பாகுபலி. உலகம்  முழுவதும் இந்த படத்திற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சிறந்த உலக சினிமாக்கள் பட்டியலிலும் பாகுபலி இடம்பிடித்தது. இந்த வெற்றிப்படத்திற்கு பிறகு ராஜமௌலி இயக்கி, வரும் ஜனவரி 7 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் திரைப்படம்  ‘ஆர்.ஆர்.ஆர்’ .






 


ரத்தம் , ரணம், ரௌத்திரம் என்பதே இந்த படத்தின் முழுமையான பெயர். இதில் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம்சரண் கதாநாயகன்களாக நடித்துள்ளனர். இவர்கள் தவிர ஆலியா பட், அஜய் தேவ்கன்,சமுத்திரக்கனி, ஸ்ரியா சரண் உள்ளிட்ட பல முக்கிய மற்றும் முன்னணி நடிகர்களும் நடித்துள்ளனர்.


1920 ஆம் காலக்கட்டத்தில் வாழ்ந்த அல்லுரி சீதா ராமராஜூ மற்றும் கொமரம் பீம் ஆகிய இரண்டு சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கையை அடிப்படையாக  கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாக உள்ள நிலையில் தற்போது படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகளில் படக்குழு மும்மரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் ராஜ மெளலியின் கனவுப்படமான  மகாபாரதம் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. 






 


இது குறித்து ராஜ மெளலி கூறும் போது, “ அடுத்த 10 ஆண்டுளில் மகா பாரதம் படப்பிடிப்பை தொடங்க வாய்ப்பு உள்ளது. மகாபாரதம் படத்தில் இவர்களெல்லாம் நடிக்க வேண்டும் என்று மக்கள் ஒரு பட்டியல் வைத்திருக்கிறார்கள். ஆனால் உண்மையாக படத்தின் கதாபாத்திரங்களில் யார் யார் நடிக்கிறார்கள் என்பது மகாபாரத கதையை நான் எழுதிய பின்னரே தெரிய வரும். என்னுடைய மகாபாரத கதையில் இடம்பெறும் கதாபாத்திரங்களை இதுவரை நீங்கள் பார்த்திருக்க முடியாது. கதை அதே கதைதான். ஆனால் அதில் இடம்பெறும் கதாபாத்திரங்கள் மேம்படுத்தப்பட்டு, அவர்களுக்கிடையே உறவுகள் சேர்க்கப்படும்”  என்று பேசியுள்ளார்.