பாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியின் அடுத்த படைப்பான `கங்குபாய் கதியாவாடி’ திரைப்படத்தின் வெளியீடு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பிப்ரவரி 18 வெளியாகும் எனத் தள்ளி வைக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகை ஆலியா பட் நடித்துள்ள இந்தத் திரைப்படம் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகி வருகிறது.  


இந்தப் படம் அடுத்த ஆண்டு ஜனவரி 6 அன்று வெளியாகி, மற்றொரு பெரிய பட்ஜெட் திரைப்படமான, தெலுங்க்கு இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் `ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படத்திற்குப் போட்டியாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. எனினும், தற்போது இந்தப் படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும், அதன் புதிய வெளியீட்டு தேதி பிப்ரவரி 18 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 



கங்குபாய் கதியாவாடி


 


`சஞ்சய் லீலா பஞ்சாலி இயக்கியுள்ள `கங்குபாய் கதியாவாடி’ படத்தின் புதிய வெளியீட்டுத் தேதியை அறிவிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம். சஞ்சய் லீலா பன்சாலி, `பென் ஸ்டூடியோஸ்’ ஜெயந்திலால் கடா ஆகியோரால் தயாரிக்கப்பட்ட இந்தப் படம், 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 18 அன்று வெளியாகும்’ எனப் படக்குழுவின் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


சஞ்சய் லீலா பன்சாலியின் இந்த முடிவை `ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி வரவேற்றுள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராஜமௌலி தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். 






இந்தத் திரைப்படத்தில் ஆலியா பட் கங்குபாய் என்ற பெண்ணின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 1960களில் மும்பையின் சிவப்பு விளக்குப் பகுதியான காமத்திபுராவில் அதிகாரம் மிக்கவரும், அனைவராலும் விரும்பப்பட்டவருமான கங்குபாய் என்ற பெண்ணின் கதையை இந்தப் படம் பேசவுள்ளது.



ஆர்.ஆர்.ஆர்


 


`கங்குபாய் கதியாவாடி’ படத்தில் சீமா பாவா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அஜய் தேவ்கன், ஹூமா குரேஷி ஆகியோர் இதில் கௌரவத் தோற்றத்தில் நடித்துள்ளார். சஞ்சய் லீலா பன்சாலியும், பென் ஸ்டூடியோஸ் தயாரிப்பு நிறுவனத்தின் ஜெயந்திலால் கடாவும் இணைந்து மிகப் பெரிய பொருட்செலவில் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர். 


இதே நிறுவனம் `ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் வட இந்தியாவின் திரையரங்க உரிமையையும், டிஜிட்டல், சேடிலைட் உரிமையையும் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.