அகண்ட விழிகள் மிடுக்கான குரல், பாந்தமான முகம், புன்னகை தவழ இதயங்களைப் பறித்த நடிகை ஸ்ரீவித்யாவின் 70ஆவது பிறந்தநாள் இன்று. தென்னிந்திய சினிமா கண்ட ஒரு அபூர்வ நாயகியான ஸ்ரீவித்யா, தனது புன்னகைக்குள் ஆயிரம் சோகங்களை மறைத்து நடிப்பதை அசாதாரணமாக நிகழ்த்தியவர்.


வயது வித்தியாசம் பார்க்காமல் கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை மட்டுமே பார்த்து படங்களைத் தேர்வு செய்து ஜொலித்த ஒரு நட்சத்திரம். மாபெரும் இசை மேதையான எம்.எல்.வசந்தகுமாரியின் மகள் தான் ஸ்ரீவித்யா. இசை வாரிசு என்பதால் நன்றாக பாடக்கூடிய திறமை இருந்தாலும், நடிப்பின் மீதும் நடனத்தின் மீதும் அவரது கவனம் திசை திரும்பியது.


நாட்டியப் பேரொளி பத்மினியின் சகோதரிகளிடம் பயிற்சி பெற்று நடனத்தில் மெருகேற்றி கே.பி.சுந்தராம்பாள் குரலில் ‘காரைக்கால் அம்மையார்’ படத்தில் இடப்பெற்ற ‘தகதகதகதகவென ஆடவா’ என்ற பாடலுக்கு நடனமாடிய சிறுமி ஸ்ரீவித்யா தான். மெல்ல மெல்ல அவரின் நடிப்பு ஆசையும் கைகூடியது.


 




தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் குவிய வசனங்களை கண்களாலேயே பேசிய ஸ்ரீவித்யாவை திரை ரசிகர்கள் கொண்டாடினர். ஒரு சில படங்களில் மட்டுமே நாயகியாக அலங்கரித்த ஸ்ரீவித்யாவுக்கு ‘அபூர்வ ராகங்கள்’ படத்துக்குப் பிறகு கோலிவுட்டில் துணை கதாபாத்திரங்களில் நடிக்கவே அதிகமாக வாய்ப்புகள் குவிந்தன.


பிரெஸ்டிஜ் பார்க்காமல் வந்த வாய்ப்புகளை எல்லாம் மிகச் சிறப்பாக நடித்து ஸ்கோர் செய்தார். நடிப்பில் மாயாஜாலம் செய்யக்கூடிய ஸ்ரீவித்யாவுக்கு சிறிதும் ஈகோ கிடையாது. 


புன்னகை மன்னன் படத்தில் சாப்ளின் செல்லப்பா கமலுடன் ஏற்படும் காதல் வெட்கம், தளபதி படத்தில் அறியாத வயதில் பெற்றெடுத்த குழந்தையை கூட்ஸ் ரயிலில் விட்டு கடைசி வரை பரிதவிக்கும் தாயின் குற்ற உணர்ச்சி, காதலுக்கு மரியாதை படத்தின் மொத்த உயிர் நாடியையும் கிளைமாக்ஸ் காட்சியில் துடிக்க விட்ட தாயின் உணர்ச்சி இப்படி எத்தனை எத்தனை கதாபாத்திரங்கள் கொடுத்தாலும், மிக யதார்த்தமாக, இயல்பான, பாந்தமான நடிப்பால் அவர் வரும் காட்சிகளை தூக்கி நிறுத்தி கைத்தல்களை அபகரித்து விடுவார். 


இப்படி தனது திரை வாழ்க்கையில் மிக சிறப்பாக பயணித்தவருக்கு தனிப்பட்ட வாழ்க்கை அத்தனை இனிமையாக அமையவில்லை. வாழ்க்கையின் இறுதி வரை சோகத்தை சுமந்தார் என்றாலும் அகண்ட கண்களால் திரை ரசிகர்களின் நெஞ்சங்களில் நேரடியாக ஊடுருவி இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். 


2006ஆம் ஆண்டு தனது 53ஆவது வயதில் புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார். அவரின் இழப்பு திரையுலகத்தை பெரும் துயரில் ஆழ்த்தியது. தென்னிந்திய சினிமாவில் இன்றும் எவரும் ஈடு செய்யமுடியாத ஒரு அபூர்வ நடிகையாக வலம் வந்து வெற்றிடத்தை விட்டுச் சென்றிருக்கிறார் ஸ்ரீவித்யா!