தென்னிந்திய சினிமாக்கள் தொடங்கி பாலிவுட் வரை கோலோச்சி இந்தய சினிமாவின் முதல் பெண் சூப்பர்  ஸ்டார் நடிகையாகத்திகழ்ந்து கொண்டாடப்பட்டவர் நடிகை ஸ்ரீதேவி (Sridevi).


ஸ்ரீதேவி மரணமும் குழப்பங்களும்




பாலிவுட் தயாரிப்பாளர் போனிகபூரை திருமணம் செய்து கொண்டு அங்கேயே செட்டிலான ஸ்ரீதேவி, தன் மகள் ஜான்வி சினிமாவில் அறிமுகம் ஆகும் நேரத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு திடீரென உயிரிழந்தது இந்திய சினிமா வட்டாரத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.


துபாயில் திருமணம் ஒன்றில் கலந்துகொள்ளச் சென்றபோது பாத்டப்பில் மூழ்கி ஸ்ரீதேவி உயிரிழந்ததாகக் கூறப்பட்ட நிலையில், அவரது மொத்த குடும்பத்தினரும் பெரும் துயரத்தில் ஆழ்ந்தனர்.


ஸ்ரீதேவியின் இறப்பை போனி கபூரின் சகோதரர் சஞ்சய் கபூர் உறுதி செய்த நிலையில், பல கட்ட விசாரணைகளைக் கடந்து, சில நாள்களில் துபாயில் இருந்து ஸ்ரீதேவியின் உடல் மும்பை கொண்டு வரப்பட்டு, அங்கு இறுதிச்சடங்குகள் நடைபெற்றன. தொடர்ந்து ஸ்ரீதேவியின் அஸ்தி இராமேஸ்வரத்தில் கரைக்கப்பட்டது.


இன்று வரை தொடரும் கேள்விகள்




இந்நிலையில், ஸ்ரீதேவி பாத்டப்பில் மூழ்கி உயிரிழந்தது தொடர்பாக இன்று வரை அவரது ரசிகர்களுக்கு  கேள்விகள் எழுந்து வருகின்றன. அவரது மரணத்தை சுற்றி ஏராளமான கட்டுக்கதைகள் இணையத்தில் உலா வருகின்றன. மறுபுறம் ஸ்ரீதேவியின் இறப்பு தந்த துயரில் அது பற்றி பேச விரும்பாத அவரது குடும்பத்தார் தொடர்ந்து அவரை இழந்து வாடும் பதிவுகளை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். அவரது ரசிகர்களாலும் இன்று வரை ஏற்றுக்கொள்ள முடியாத மரணமாக இது உள்ளது.


இந்நிலையில் ஸ்ரீதேவியின் மரணம் பற்றி அவரது கணவர் போனி கபூர் முதன்முறையாக மனம் திறந்துள்ளார். தனியார் ஊடகத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்திருப்பதாவது: 


பட்டினி கிடந்த ஸ்ரீதேவி...


“அது ஒரு  இயற்கையான மரணம் அல்ல; அது ஒரு விபத்தால் நிகழ்ந்த மரணம். என்னிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது நான் கிட்டத்தட்ட 24 அல்லது 48 மணி நேரங்களுக்கு அதைப் பற்றி பேசியதால், இனி அதைப் பற்றி பேச வேண்டாம் என்று முடிவு செய்தேன்.




உண்மையில், இந்திய ஊடகங்களிசமிருந்து அதிக அழுத்தம் இருந்ததால் தான், தாங்கள் இப்படி விசாரணை செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இந்த இறப்பில் எந்த மர்மமும் இல்லை என்பதை அவர்கள் தெரிந்து கொண்டனர்.  உண்மை கண்டறிதல் சோதனை உட்பட அனைத்து சோதனைகளையும் நான் கடந்து வந்தேன். அதன் பின் இது விபத்தால் நிகழ்ந்த மரணம் என அறிக்கை வந்தது.


டயட்.. பேச்சுமூச்சின்றி மயக்கம்..


ஸ்ரீதேவி அடிக்கடி பட்டினி கிடப்பார், அவள் அழகாக இருக்க விரும்பினாள். திரையில் அழகாகத் தெரிய விரும்பினார், அதற்காக நல்ல உடல்வாகு, ஷேப்பில் இருப்பதை விரும்பி டயட்டில் இருந்தார். எங்களுக்கு திருமணம் ஆனது முதல் அவர் இரண்டு முறை திடீர் திடீரென பேச்சு மூச்சின்றி மயங்கி விழுந்துள்ளார் (Block out). மேலும் அவருக்கு ரத்த அழுத்தப் பிரச்னை இருந்தது.


இது ஒரு எதிர்பாராத சம்பவம்... ஸ்ரீதேவி உயிரிழந்தபோது இரங்கல் தெரிவிக்க வந்தார் நடிகர் நாகார்ஜுனா. அப்போது பேசிய அவர்,  ஒரு திரைப்படத்தின் ஷூட்டிங்கின்போது இதேபோல் ஸ்ரீதேவி க்ரேஷ் டயட்டில் (Crash Diet) இருந்து மயங்கி விழுந்ததாகவும்,  குளியலறையில் விழுந்து பல்லை உடைத்துக் கொண்டதாகவும் கூறினார்” என வருத்தத்துடன் பகிர்ந்துள்ளார்.