நடிகை ஸ்ரீதேவியின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது கணவரும் தயாரிப்பாளருமான போனி கபூர் உருக்கமான பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.
ஸ்ரீதேவி நினைவு நாள்:
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக தனது நான்கு வயதில் அறிமுகமாகி மலையாளம், தெலுங்கு,கன்னடம், இந்தி என தென்னிந்தியா முதல் வட இந்தியா வரை பான் இந்தியா ஸ்டாராக 80களிலேயே வலம் வந்து உச்ச நட்சத்திரமாக ஜொலித்தவர் நடிகை ஸ்ரீதேவி.
தென்னிந்தியாவில் இருந்து பாலிவுட்டுக்குச் சென்று கோலோச்சிய வெகு சில நடிகைகளில் ஒருவரான ஸ்ரீதேவி பாலிவுட்டில் தன்னிகரற்ற நடிகையாக உருவெடுத்து உலகம் முழுவதும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைப் பெற்றார்.
இந்தியா முழுவதும் பிரபலம்:
தமிழில் கமல், ரஜினி தொடங்கி தெலுங்கு, இந்தி என அனைத்து மொழி சினிமாக்களின் உச்ச நட்சத்திரங்களுடன் அதிக படங்களில் நடித்து கொண்டாடித் தீர்க்கப்பட்ட ஸ்ரீதேவி, 1996ஆம் ஆண்டு இந்தி சினிமாவின் பிரபல இயக்குநரான போனி கபூரை மணந்து கொண்டு பாலிவுட் மருமகளாக செட்டில் ஆனார். ஜான்வி, குஷி எனும் இரு மகள்களுடன் தொடர்ந்து ஏராளமான படங்கள் நடித்து, இந்திய சினிமா கொண்டாடும் முக்கிய நடிகைகளுள் ஒருவராக வலம் வந்த ஸ்ரீதேவி, 2018ஆம் ஆண்டு எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார்.
2018ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி துபாய் சென்றிருந்தபோது அங்கு அவர் தங்கியிருந்த ஓட்டல் அறையில் குளியலறையில் பாத் டப்பில் மூழ்கிய நிலையில் உயிரிழந்து கிடந்த ஸ்ரீதேவியின் உடல் தொடர்ந்து இந்தியா கொண்டு வரப்பட்டு அவருக்கு இறுதிச்சடங்குகள் நடைபெற்றன.
கணவர் உருக்கம்:
இந்திய சினிமாவின் உச்ச நடிகையாக யாரும் தொட முடியாத உயரத்தை அடைந்து ஜொலித்த ஸ்ரீதேவியின் திடீர் இறப்பு, அவரது எண்ணற்ற ரசிகர்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில், இன்று ஸ்ரீதேவியின் 5ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு போனி கபூர் ஸ்ரீதேவி உடனான மறக்க முடியாத, அழகிய தருணங்களை தன் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஸ்ரீதேவி உடன் தான் 1984ஆம் ஆண்டு எடுத்துக் கொண்ட முதல் ஃபோட்டோ, போனி கபூருக்கு ஸ்ரீதேவி வாஞ்சையாக முத்தமிடும் புகைப்படம் ஆகியவற்றைப் பகிர்ந்துள்ளார்.
அதேபோல் ஸ்ரீதேவியை முதன் முதலில் தமிழ் சினிமாவில் பார்த்து அவரை பார்த்த விநாடியே பிடித்துப் போனது, பின் சென்னை சென்று அவரை ஒரு மிஸ்டர் இந்தியா படத்துக்காக ஹீரோயினாக ஒப்பந்தம் செய்தது, ஸ்ரீதேவியின் அன்னையுடன் தான் கொண்டிருந்த உறவு ஆகியவற்றைப் பற்றி பேசும் வீடியோ ஒன்றையும் பகிர்ந்து போனி கபூர் ஸ்ரீதேவியை நினைவுகூர்ந்துள்ளார். மேலும் தனது இன்ஸ்டா ஸ்டோரியிலும் ஸ்ரீதேவி குறித்து நினைவுகூர்ந்து போனி கபூர் பதிவுட்டுள்ள்ளார்.