கொரோனாவின் தாக்கம் அதிகரித்த பிறகு சமூக வலைத்தளவாசிகளின் ஆதிக்கம் அதிகமாகிவிட்டது. மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் யூடியூப் வலைத்தளத்தில் சமையல், கைத்தொழில், மீம்ஸ், வரலாறு என பல்வேறு பிரிவுகளில் வெளியாகும் வீடியோக்களும் வீட்டிற்குள்ளேயே இரண்டு வருடங்களாக கூடு கட்டி வாழும் மக்களுக்கு பொழுதுபோக்கு.


குறிப்பாக, உணவு சார்ந்த வீடியோக்களுக்கு மவுசு அதிகரித்துள்ளது. யூடியூப்பில் சமையல் கலையில் நாடு, இனம், மொழிகளை தாண்டி பெண்கள் பலரும் படுபிசியாக இருக்கின்றனர். அவ்வகையில், இலங்கையைச் சேர்ந்த இளம்பெண் நாடியின் சமையல் குறிப்புகள் உலகளவில் கவர்ந்து வருகிறது. அங்குள்ள கிராமம் ஒன்றில் வசித்து வரும் நாடியின் ரெசிபிகள் மற்றவற்றிலிருந்து மாறுபடுவதே அதற்கு காரணம். யூடியூபில் எக்கச்சக்கமாக பாரம்பரிய உணவு சார்ந்த பக்கங்கள் இருந்தாலும், நாடியின் வலைத்தளப்பக்கம் வித்தியாசமானது; ஆச்சரியமானது. 



 

அவருடன் கூடவே அவரது பாட்டி மற்றும் சகோதரர் மல்லியும் இதற்கு உதவுகின்றனர்.  பெரும்பாலும், மண்ணால் ஆன ஓவன், மண் அடுப்பு, அகப்பை, மண் பாத்திரங்கள் ஆகியவற்றையே உபயோகிக்கிறார். மூங்கில், கற்கள் ஆகியவற்றால் ஆன பாத்திரங்களும் இவர்கள் சேனலின் சிறப்பம்சம்.

 

சீன மொழியில் புகழ்பெற்ற Liziqi என்கிற இளம்பெண்ணின் யூடியூப் சேனலே இந்த ‘Traditional Me' சேனலுக்கு முன்னோடியாக அமைந்துள்ளது. இலங்கையின் மண் மணம் சார்ந்த உணவுகளை இவர் தனது சேனலில் பதிவிடுகிறார். பழைமை மாறாத வீடு, சுற்றிலும் மரங்கள், மலைகள், செடி கொடிகள், பழங்கால பாத்திரங்களுக்கு நடுவே மாடர்ன் பாத்திரங்களும், ஒவ்வொரு உணவுக்கான சமையலறைப் பொருளையும் அவர் வைத்திருக்கும், உபயோகிக்கும் பாங்கு என பலதரப்பினரின் மனதையும் கவரும் வகையில் அமைந்துள்ளது இந்த யூடியூப் சேனல்.



 

துரியன் பழத்திலிருந்து தயாரிக்கப்படும் இனிப்பு வகை, கற்றாழை ஜூஸ், மாங்காய் இறால் குழம்பு, இலங்கையின் ஸ்பெஷல் சம்பல், செம்பருத்தி பூ டீ என்று இவருடைய ரெசிப்பிக்கள் அனைத்துமே வித்தியாசமாக மிளிர்கின்றன.  மலை உப்பு, தேங்காய் எண்ணெய், பனைமர சர்க்கரை என இவர் உபயோகிக்கும் சமையல் பொருட்களும் பெரும்பாலும் ஆரோக்கியத்தை பாழாக்காதவை.



 
அழகான உணவு வகைகளை மிகத்துல்லியமாக படம்பிடிக்கும் கேமரா கோணங்கள், தெளிவான பின்னணி இசை, உறுத்தாத வண்ணங்கள், எல்லோருக்கும் புரியும் வைகையில் சப் டைட்டில்கள், கண்ணுக்கு குளிர்ச்சியான இயற்கை என ``ட்ரெடிஷனல் மீ” சேனல் உணவுலகில் ஒரு இனிமையான சங்கீதம்!

இது போன்ற சமையல் குறிப்புகளை வழங்கும் போது, சுவையும், கை பக்குவக் குறிப்புகளும் மட்டும் பார்வையாளர்களிடம் எடுபடுவதில்லை. அதை விளக்கும் முறை தான். 

அப்படி பார்க்கும் போது அவரது உரையாடலில் வரும் இலங்கை வாசம் தான் அந்த குறிப்புகளை பெறுவோருக்கு வேறுவிதமான உற்சாகத்தை தருகிறது.