இலங்கை அதிபர் தேர்வுக்கான  மனுத்தாக்கல் நிறைவடைந்துள்ளது. யார் யார் வேட்பாளர்கள் என்ற முழுவிபரம் இந்த தொகுப்பில் விவரிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் புதிய அதிபர் பதவிக்காக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை தேர்வு செய்யும் வேட்புமனு தாக்கல்  நிறைவடைந்துள்ளது. இதனையடுத்து நாளை அதிபர் தேர்தலுக்கான ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.


இந்த அதிபர் தேர்வுக்காக நாடாளுமன்றத்தில் தேர்தல் அதிகாரியாக ,நாடாளுமன்ற பொது செயலாளர் தம்மிக்க தசநாயக்க செயற்பட்டிருக்கிறார். புதிய வேட்பாளர்களாக டலஸ் அழகப்பெரும, ரணில் விக்ரமசிங்க, அனுர குமார திசாநாயக்க ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். மேலும் இன்றைய வேட்பு மனுத் தாக்கலின் போது மகிந்த ராஜபக்சவின் பொது ஜன பெரமுனவை சேர்ந்த டலஸ் அழகப்பெருமவின் பெயரை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்மொழிய, அதனை ஜீ.எல்.பீரிஸ் வழிமொழிந்தார்.


நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல் பீரிஸ்  ஏற்கனவே ரணில் விக்கிரமசிங்க அதிபராவதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தது  குறிப்பிடத்தக்கது. அதேபோல் ரணில் விக்ரமசிங்கவின் பெயரை பொதுஜன பெரமுனவிலிருந்து பிளவுபட்ட  தினேஸ் குணவர்தன முன்மொழிய அதனை மனுஷ நாணயக்கார  வழிமொழிந்தார். மக்கள் விடுதலை முன்னணியின் அனுர குமார திசாநாயக்கவின் பெயரை விஜித ஹேரத் எம்.பி முன்மொழிந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தாபயவின் பதவி விலகலை தொடர்ந்து ரணில் விக்ரமசிங்க பதில் அதிபராக பொறுப்பேற்றார்.







இந்நிலையில் இலங்கை புதிய அதிபருக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று நடைபெற்றது. 


நாளை தினம் ரகசிய வாக்கெடுப்பு மூலம் இலங்கையின் புதிய அதிபர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.  


இலங்கையில் தொடர்ந்து சில  மாதங்களாக நிலவிவரும் கடும் பொருளாதார நெருக்கடியை அடுத்து கோட்டபய ராஜபக்ச, மஹிந்த ராஜபக்ச என, ராஜபக்ச குடும்பத்தினருக்கு எதிராகப் போராட்டம் வெடித்தது. இதையடுத்து மே மாதம் பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்ச பதவி விலகினார்.  ஆனால் மக்கள் போராட்டம் ஓய்ந்தபாடில்லை. 


அண்மையில் மக்கள் போராட்டம் இலங்கையில் மிகத் தீவிரமடைந்ததால், போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகையினை கைப்பற்றினர். இதனால்  சிங்கப்பூா் தப்பிச் சென்ற கோட்டபய ராஜபட்ச, அதிபா் பதவியை ஜூலை 14ஆம் தேதி ராஜினாமா செய்தாா். இந்தத் தகவலை நாடாளுமன்ற அவைத் தலைவா் அலுவலகம் ஜூலை 15ஆம் தேதி அறிவித்தது. இதையடுத்து பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க இடைக்கால அதிபராக அன்றே பதவியேற்றாா். இவ்வாறு பொருளாதார நெருக்கடியினால் தொடர்ந்து, இலங்கை அரசியல் களத்தில் தொடர்ந்து பல மாறுதல்கள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கின்றன. 


நாளை (20/07/2022)புதிய அதிபர் தேர்தலுக்கான வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ள நிலையில் தற்காலிக அதிபர் ரணில் விக்கிரமசிங்க, ஜேவிபி தலைவர் அனுரா குமாரதிசநாயக மற்றும் டல்லஸ் அழகப் பெரும உள்ளிட்டோர் போட்டியிட உள்ளனர். இலங்கையில் பொருளாதாரத்தை மீட்டெடுத்து அனைத்துக் கட்சி அரசு அமைக்கலாம் என்றும், கருத்து  வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து விட்டு நாட்டுக்காக ஒன்றிணைய வேண்டும் என்றும் பிற கட்சிகளுக்கு ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  நாளை நடக்கவுள்ள தேர்தல் இலங்கையின் தலையெழுத்தை மாற்றியமைக்கும் முக்கிய தேர்தலாக இருக்கவிருக்கிறது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண