பாகுபலி என்னும் பிரம்மாண்ட படைப்பிற்கு பிறகு அதன் இயக்குநர் ராஜமௌலி கையில் எடுத்திருக்கும் திரைப்படம் ‘ஆர்.ஆர்.ஆர்’ . 1920-ஆம் காலக்கட்டத்தில் வாழ்ந்த அல்லுரி சீதா ராமராஜூ மற்றும் கொமரம் பீம் ஆகிய இரண்டு சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் படத்தில் பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர்.
மேலும் இந்த படத்தில் ஆலியா பட், ஸ்ரேயா சரண், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் இப்படம் தயாராகி வருகிறது. சமீபத்தில் இந்த படத்தில் பாடல் ஒன்று வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. ‘நட்பு’ என்ற அந்த பாடல் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் நட்பு பாடல் யூடியூபில் 50 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இதனை சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றன. முன்னதாக ’ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் மேக்கிங் காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தனர் படக்குழு. மெய்சிலிர்க்கும் வகையில் இருந்த காட்சிகள் படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரிப்பதாக இருந்தது.
ஆர்.ஆர்.ஆர் என்பது இரத்தம் ரணம் ரௌத்திரம் என்பதன் சுருக்கமாகும். இந்த படத்தின் இறுதி படப்பிடிப்பு உக்ரைன் நாட்டில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் ஆர்.ஆர்.ஆர் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. இதையடுத்து படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். அந்த புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது. படம் வருகிற அக்டோபர் 13-ஆம் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால் கொரோனா பரவல் காரணமாக தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் திரையரங்குகள் இன்னும் திறக்கப்படாமல் உள்ளதால் படத்தின் வெளியீட்டு தேதியை சற்று கால இடைவெளிக்கு பின்னர் வைத்துக்கொள்ளலாம் என முடிவெடுத்துள்ளார்களாம். இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.
தமிழகத்தின் ஆர்.ஆர்.ஆர் படத்திற்கான வெளியீட்டு உரிமையை பெற்றுள்ளது லைகா. திரையரங்கு வெளியீட்டிற்காக காத்திருக்கும் இந்த படம் , வெளியான குறிப்பிட்ட சில கால இடைவெளிகளில் ஒடிடி தளங்களில் வெளியாக உள்ளது. அதன்படி ஆர்.ஆர்.ஆர் படத்தின் இந்தி பதிப்பை நெட்ஃபிளிக்ஸ் தளத்திற்கும் , மற்ற மொழிகளின் ஒடிடி வெளியீட்டு உரிமையை ஜீ5 ஓடிடி தளத்திற்கு வழங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தொலைக்காட்சி வெளியீட்டு உரிமையை தமிழில் விஜய் டிவி கைப்பற்றியுள்ளது. அதேபோல தெலுங்கு மற்றும் கன்னடத்திற்கான உரிமையை ஸ்டார் தொலைகாட்சியும், இந்தியில் ஜீ சினிமாவும், மலையாளத்தின் உரிமையை ஏசியாநெட்டும் பெற்றுள்ளன.