ஸ்பைடர்மேன் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் டாம் ஹாலண்ட். ஸ்பைடர் மேன் ஹோம்கமிங் படத்தில் ஸ்பைடர்மேனாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் டாம் ஹோலண்ட். மேலும் இந்தப் படத்தில் தனக்கு இணையாக நடித்த ஜெண்டாயாவை காதலித்து வருகிறார். 27 வயதான டாம் ஹோலண்ட் பொதுவெளிகளில் நடிகராக இருப்பதின் ஒருவர் எதிர்கொள்ளும் சிக்கல்களை தொடர்ச்சியாக பேசி வருபவர். மேலும் ஜெண்டாயா மற்றும் டாம் ஹாலிவுட் திரையுலகில் அதிகம் பேசப்படும் காதல் ஜோடிகளில் ஒன்று.
ஹாலிவுட் என்னை பயமுறுத்துகிறது
அண்மையில் பாட்காஸ்ட் ஒன்றில் தனது சினிமா வாழ்க்கை குறித்த பல்வேறு அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட டாம் ஹாலண்ட் “ நான் சினிமா தயாரிப்பின் மிகப்பெரிய ரசிகன். ஆனால் ஹாலிவுட் எனக்கானது இல்லை. அது என்னை பயமுறுத்துகிறது” என்று கூறியுள்ளார்.
“சினிமாவின் வியாபார யுக்தி என்னை பயமுறுத்துகிறது. அதில் நானும் ஒரு அங்கம்தான் என்பதை நான் அறிவேன் நான் முடிந்த அளவு சினிமாவை என் தனிப்பட்ட வாழ்க்கையில் இருந்து விலக்கி வைக்கவே முயற்சிக்கிறேன் ஆனால் ஹாலிவுட்டின் வியாபார யுக்திக்குள் நான் சிக்கிவிட்டேன் . எனக்கு முன் பலர் இந்தத் துறையில் தங்களது சுயத்தை இழந்து பார்த்திருக்கிறேன். முடிந்த அளவிற்கு என் குடும்பத்துடன் நேரம் செலவிட ஆசைப்படுகிறேன்” என அவர் கூறியுள்ளார்
நடிகர் - தயாரிப்பாளர்
நடிகராக கலக்கி வந்த டாம் அண்மையில் ஆப்பிள் டிவி நிறுவனம் வழங்கிய தி ரவுடட் ரூம் ( the crowded room ) ஆந்தலாஜி வழியாக தயாரிப்பாளராக மாறியுள்ளார். தீவிர மனநல பிரச்சனைகளை எதிர்கொள்ளும் நிஜ மனிதர்களின் கதைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்தத் தொடரில் நடித்தும் வந்தார் டாம். தற்போது இந்தத் தொடர் முடிவடைந்துவிட்ட நிலையில் திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து ஒரு ஓராண்டுக்கு இடைவெளி எடுத்துக்கொள்ளப்போவதாக அறிவித்திருந்தார் டாம். இந்தத் தகவல் அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியளிக்கும் தகவலாக வந்து சேர்ந்தது.
ஒரே நேரத்தில் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் என இரண்டு பொறுப்புகளையும் எடுத்துக்கொண்டதால் தான் மிகவும் சோர்ந்துபோனவராக உணர்வதாக தெரிவித்துள்ளார் டாம்.
“நான் இதுவரை என் வாழ்வில் அனுபவித்திராத புதிய வகையான உணர்வுகளைக் கொண்ட தொடர் இது. நடிப்பது மட்டுமில்லாமல் இந்தத் தொடரை தயாரிக்கும் பணி என்னை மிக சோர்வடையச் செய்துவிட்டது. ஒரு நடிகனாக நீங்கள் அந்த கதையின் உணர்வுகளோடு பயணிக்க வேண்டு அதே நேரத்தில் ஒரு தயாரிப்பாளராக படப்பிடிப்புத் தளத்தில் நிகழும் அன்றாட பிரச்சனைகளையும் சமாளிக்க வேண்டும். அதனால் சுமார் ஒராண்டு காலத்திற்கு எனக்கு ஓய்வுத் தேவைப்படுகிறது” என முந்தையதாக அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.