விஜய் இயக்கத்தில் வெளிவந்த ‘பொய் சொல்ல போறோம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பியா பாஜ்பாய். தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கிய கோவா படத்தில் கதாநாயகியாக நடித்தது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுத்தந்தது. ஜீவாவுடன் கோ படத்திலும், சமீபத்தில் வெளியான அபியும் அனுவும் படங்களிலும் நடித்தார். அதன்பிறகு தமிழில் வேறெதுவும் பட வாய்ப்புகள் இல்லை என்றாலும், இந்தியில் அனிருதா ராய் சவுதரியின் லாஸ்ட் திரைப்படத்தில் நடித்துள்ளார். யாமி கவுதம் லீட் ரோலில் நடிக்கும் இந்த திரைப்படம் குறித்து அவர் அளித்த பேட்டியில் பல ஸ்வாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துள்ளார். 


இந்த படத்தின் வாய்ப்பு கிடைத்தது பற்றி கூறுகையில், "பிங்க் படம் வெளியானதில் இருந்து அனிருதாவுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று ஆசைப்பட்டேன், ஆனால் எனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை. நான் காஷ்மீரில் இருந்தபோது, ​​காஸ்டிங் டைரக்டரிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது, அனிருதா சார் என்னை ஆடிஷனுக்கு அழைத்திருக்கிறார் என்று. சில நேரங்களில் நாம் விரும்பும் வழியில் வாழ்க்கை இருக்காது. நாம் சில சமயங்களில் எதுவுமே வேண்டாம் என்று ஒதுங்கி இருப்போம். LOST திரைப்படம் என்னிடம் வந்தபோது நான் அந்தக் கட்டத்தில்தான் இருந்தேன். நான் காஷ்மீரை விட்டு மும்பைக்கு வர விரும்பவில்லை. 10 நாட்களுக்குப் பிறகு, நான் வந்து அவரைச் சந்தித்தேன், அப்போதுதான் யதார்த்தம் புரிய துவங்கியது, நான் என்ன செய்கிறேன் என்பதை உணர்ந்தேன். நான் கதையைக் கேட்டதும் உடனே சரி என்று சொல்லிவிட்டேன்." என்றார்.



அனிருதா உடன் பணிபுரிந்த அனுபவத்தை விவரிக்கும்போது பியா, "அவர் இப்படி செய்யுங்கள், இப்படி நடியுங்கள் என்று எங்களை இயக்கவில்லை. சூழ்நிலையைச் சொல்லி நடிகர்களை நடிக்கச் சொல்கிறார். சரியில்லை என்றால், அவர் சொல்வார். நான் பல படங்களில் நடித்திருக்கிறேன், ஆனால் அவருடன் சேர்ந்து பணிபுரியும்போது, நிறைய கற்றுக்கொண்டேன். பல சமயங்களில், ‘ஐயோ, நான் இந்தக் கோணத்தில் யோசிக்கவில்லையே’ என்று உணர்ந்தேன். அதனால் அவருடன் பணிபுரிவது நான் ஒரு கல்வி நிறுவனத்தில் படிப்பது போல் இருந்தது." என்று கூறினார்.


பியா 10 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத் துறையில் உள்ளார். அவர் வீட்டை விட்டு வெளியேறி டெல்லி சென்று பின்னர் மும்பைக்கு வந்தபோது அவருக்கு வயது 15. டெல்லியில் இரண்டு மூன்று மாதங்கள் ரிசப்ஷனிஸ்ட்டாக பணிபுரிந்தார். “மும்பைக்கு வருவது கடினமாக இருந்தது. மும்பைக்கு எப்படி செல்வது என்று தெரியாததால் டெல்லி ரயில் நிலையத்தில் இரண்டு இரவுகளைக் கழித்தேன்.



எப்படியோ ஒருவழியாக வந்தடைந்தேன், ஆனால் எனக்கு இங்கு தங்கும் இடம் கிடைக்கவில்லை. அந்தேரிக்குப் போகச் சொன்னார் ஒருவர். ஆனால் நான் அங்கு சென்றபோது, ​​அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளர் இடம் இல்லை என்று கூறினார், எனவே அவர் தனது நாயை வைத்திருக்கும் மிகச் சிறிய அறையில் அட்ஜஸ்ட செய்துகொள்ள முடியுமா என்று என்னிடம் கேட்டார். வேறு வழியில்லாததால் அந்த நாயுடன் ஒன்பது மாதங்களுக்கும் மேலாக அங்கேயே இருந்தேன். இப்போதெல்லாம் அந்த அறையை விட என் கழிப்பறை கூட பெரியதாகிவிட்டது. ஆனால் எல்லாப் போராட்டத்துக்குப் பிறகும் நிச்சயம் நல்லது நடக்கும் என்று எனக்குத் தெரியும்,” என்று நினைவு கூர்ந்த பியா, "சரியான நேரத்தில் சரியான நபர்களைச் சந்தித்தால் எல்லாம் எளிதாகிவிடும். இது ஆரம்பத்தில் ஒரு போராட்டமாக இருந்தது, ஆனால் மெதுவாக, எல்லாம் சரியான இடத்தில் கூடியது. இன்று மக்கள் வேலைவாய்ப்பின்றி, நம்பிக்கை இழந்து இருக்கிறார்கள், அதற்காக அவர்கள் எதையும் செய்யத் தயாராக இருக்கிறார்கள், இது மிகவும் வருத்தமாக இருக்கிறது" என்று கூறினார்.