நடிகரும் சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமாருக்கு நாய்க்குட்டிகள் என்றால் அலாதி பிரியமாம். அவர் வீட்டில் தற்போது வளர்க்கும் நாய்க்குட்டியின் பெயர் தோர் (Thor). அவெஞ்சர்ஸ் படத்தில் வரும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தின் பெயர் தான் தோர். 

Continues below advertisement


2008-ம் ஆண்டு 'அயர்ன் மேன்' திரைப்படத்துடன் மார்வல் சூப்பர் ஹீரோக்களின் மார்வல் சினிமா உலகம் என்று சொல்லப்படும் திரைப்பட வரிசை ஆரம்பமானது. தொடர்ந்து 'ஹல்க்', 'தோர்', 'கேப்டன் அமெரிக்கா' என அடுத்தடுத்து சூப்பர் ஹீரோ படங்களை வெளியிட்டு அந்தக் கதாபாத்திரங்கள் வாழும் உலகம் எனத் தனியாகச் சித்தரிக்கப்பட்டது.


மூன்று கட்டங்களாக மொத்தம் 23 படங்கள் இதுவரை வெளியாகியுள்ளன. இதில் 'அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்' திரைப்படமே இந்த வரிசையில் கடைசி. இந்தப் படம் உலகத் திரை வரலாற்றில் அதிகம் வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையையும் படைத்தது. தோர் கதாபாத்திரம் இந்த படங்களில் மிகவும் முக்கியமானது. கதைப்படி தோர் கதாபாத்திரத்துக்கு வயது 1500. அந்த கதாபாத்திரத்தின் பெயரைத் தான் சரத்குமார் அவரது நாய்க்குட்டிக்கு சூட்டியுள்ளார்.


இந்நிலையில் சரத்குமார் தனது பிரியமான தோர் நாயுடன் விளையாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தனது செல்ல நாய்க்குட்டி ஈரத்துடன் வருவதைப் பார்த்து அதனை துண்டுவைத்து துவட்டிவிடுகிறார் சரத்குமார். கூடவே அதன் பராமரிப்பாளரிடம் ஏன் நாய் இவ்வளவு ஈரமாக இருக்கிறது என்று வினவுகிறார். அதற்கு அந்த நபர் லீஷை கழுவியபோது ஈரமாகிவிட்டது எனக் கூறுகிறார். நாய் சரத்குமாரை பிரியமுடன் சுற்றிச் சுற்றி வருகிறது. அவருடன் அதனைக் கொஞ்சி ஆசுவாசப்படுத்தி பராமரிப்பாளரிடம் கொடுக்கிறார். 


அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த சரத்குமார், எனது தோருடன் சிறப்பான தரமான தருணம். ஹைதராபாத்தில் நாக சைதன்யா, அரவிந்த்சாமி நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கும் கஸ்டடி படப்பிடிப்பிற்கு செல்லும் முன் சிறிது நேரம் விளையாடினோம் என்று பதிவிட்டுள்ளார்.