இங்கிலாந்து இளவரசி மறைந்த டயானாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்கள் வெளியாகிவிட்டன. ஏற்கெனவே நெட்பிளிக்ஸில் ‘தி க்ரவுன்’ திரைப்படம் வெளியாகி சக்கைபோடு போட்டுக்கொண்டுள்ளது. அந்த வரிசையில் டயானாவின் கதையை மையமாக வைத்து ஹாலிவுட் மேலும் ஒரு படத்தைத் தயாரித்துள்ளது. ஸ்பென்ஸர் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் டயானாவாக ’தி ட்வைலைட்’ திரைப்பட நாயகி கிரிஸ்டன் ஸ்டீவர்ட் நடிக்கிறார்.


இளவரசர் சார்லஸை பிரிய டயானா எப்போது முடிவெடுத்தார் என்பதுதான் படத்தின் ஒன்லைனர். படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ள நிலையில் கிரிஸ்டன் ஸ்டீவர்ட் டயானாவாக நடித்துள்ளதற்கு வரவேற்பும் எதிர்ப்பும் ஒரே சேரக் கிளம்பியுள்ளன. ‘டயானாவாக நடிக்க வைக்க ஹாலிவுட்டுக்கு வேறு ஆட்களே கிடைக்கவில்லையா?, இளவரசி டயானா மிகவும் மென்மையானவர் ஆனால் கிரிஸ்டன் தடாலடிப் பேர்வழி டயானாவின் பாத்திரத்துக்கு கிரிஸ்டன் எப்படிப் பொருந்துவார்’ என்பது போன்ற கடும் விமர்சனங்களும் கிளம்பியுள்ளன. 



மற்றொரு பக்கம் கிரிஸ்டன் இந்த வருடத்துக்கான ஆஸ்கர் விருதைப் பெறுவார் என்றும் ட்விட்டரில் சில முக்கியப் பிரமுகர்கள் பதிவிட்டு வருகின்றனர். 










1991ல் பிரிட்டன் அரச குடும்பத்தின் சாண்ட்ரிங்கம் அரண்மனையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் இருந்த சமயத்தில்தான் டயானா சார்லஸை பிரியும் முடிவை எடுத்தார். சாண்ட்ரிங்கம் அரண்மனையில் என்ன நடந்தது. அவர் ஏன் அந்த முடிவை எடுத்தார் என்பதை கற்பனை கலந்து உருவாக்கப்பட்டிருக்கும் இந்தத் திரைப்படம் சொல்கிறது. படத்தின் தயாரிப்பு நிறுவனமான நியான் படத்தின் போஸ்டரை நேற்று முன் தினம் வெளியிட்டிருந்தது. போஸ்டர் வைரலானதும் குறிப்பிடத்தக்கது. 


 






படத்தை பப்லோ லாரைன் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன்பு நட்டாலி போர்ட்மேன் நடிப்பில் ஜேக்குலின் கென்னடி வாழ்க்கையை மையமாக வைத்து ஜாக்கி என்னும் திரைப்படத்தை இயக்கியவர்.