மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியன் பல்வேறு இசையமைப்பாளர்களுக்கு பாடியிருந்தாலும் அவரும் இசையமைப்பாளர் இளையராஜாவும் தமிழ் சினிமாவின் நிரந்தர இசை இணை எனலாம். பாலசுப்ரமணியத்தின் மகன் எஸ்.பி.பி.சரண் தந்தையை ஒத்த குரல் வளம் மிக்கவர், மனதோடு மனோ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் சற்று வித்தியாசமாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் குறித்துச் சிலாகிக்கிறார். அந்த சுவாரசியப் பகுதியின் தொகுப்பு இதோ... “அப்பாவின் பாடல் கேட்டுதான் நான் வளர்ந்தேன். அப்பாவின் பாடலுக்கு நான் அவ்வளவு ரசிகன். நான் அந்த வீட்டில் பிறந்தாலும் இன்று வரை அவரை அவரது ரசிகனாகத்தான் அணுகுகிறேன்.பிறந்ததில் இருந்து சாப்பிடும்போது தூங்கும்போது என அவரது பாடலைக் கேட்டால்தான் எனக்கு அன்று இயக்கமே இருக்கும். அப்பா ஊருக்கு போகும் சமயத்தில் அம்மா ரஃபியின் பாடல்களைக் கேட்பார்” என்றபடியே ”தாரிஃபு பனே கா உஸ்கி..’ என்கிற ரஃபியின் பாடலைப் பாடுகிறார். அப்பாவுக்கு ரசிகர் என்று சொன்னாலும் அவ்வப்போது யேசுதாஸ் பாடிய பாடல்களையும் நிகழ்வில் ஆங்காங்கே பாடுகிறார்.






“அப்பா சிறு வயதிலிருந்தே பாடு என மிரட்டினாலும் அவரிடம் நேரடியாகப் பாடமாட்டேன். அக்காவுக்குதான் பாடுவதில் விருப்பம். அவர் முன் பாடாமல் கேசட்டை வாங்கிக்கொண்டு போய் பாத்ரூமில் உட்கார்ந்து பாடி ரெக்கார்ட் செய்து எடுத்துக்கொண்டு வந்து அவரிடம் கொடுத்துவிடுவேன்” என்கிறார். ’அலைபாயுதே’ படத்தில் ஏ.ஆர்.ரகுமானுக்காக காதல் சடுகுடுகுடு பாடலைப் பாடியவர். ஏ.ஆர். ரகுமனைப் பற்றிக் கேட்டதும் அவரது இசைக்காக உயிரையே கொடுக்கலாம் என்கிறார். எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா ஊரடங்கு காலத்தில் கோவிட் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.