என்ன தான் கிளாமரா நடிக்கிற நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் மவுசு இருந்தாலும் ஹோம்லி லுக் இருக்கும் நடிகைகள் என்றுமே விரும்பத்தக்கவர்களாகவே இருந்து வருகிறார்கள். நதியா, ரேவதி போன்ற நடிகைகளின் வரிசையில் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஒரு நடிகை தான் சிந்து மேனன். தமிழ் சினிமா மட்டுமின்றி கன்னடம், மலையாளம், தெலுங்கு என அனைத்து மொழி படங்களிலும் நடித்ததன் மூலம் தென்னிந்திய நடிகையாக பிரபலமான சிந்து மேனன் இன்று தனது 38வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 


 


குழந்தை நட்சத்திரமாக கன்னட திரைப்படத்தில் அறிமுகமான சிந்து  மேனன். தனது 15வது வயதில் ஹீரோயினாக ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் அறிமுகமானார். சரத்குமார்,முரளி, மனோஜ் பாரதிராஜா உள்ளிட்டோருடன் நடித்த குடும்ப சென்டிமென்ட் சார்ந்த திரைப்படமான சமுத்திரம் படத்தில் அறிமுகமானார். முதல் படமே சூப்பர் ஹிட் படமாக வெற்றி பெற்றதால் தமிழ் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார். அதனை தொடர்ந்து பாரதிராஜா இயக்கத்தில் 2002ம் ஆண்டு வெளியான 'கடல் பூக்கள்' படம் சிறந்த திரைக்கதையாக தேசிய விருதை பெற்றது. அப்படத்தின் ஹீரோ முரளி சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார். அதில் முரளிக்கு ஜோடியாக நடித்து இருந்தார் சிந்து மேனன் என்பது குறிப்பிடத்தக்கது. 


படிப்படியாக முன்னேறிய சிந்து மேனன் அடுத்ததாக விஜய் நடிப்பில் வெளியான 'யூத்' படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இப்படமும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற ஒரு படம். ஒரு சில காட்சிகள் மட்டுமே நடித்திருந்தாலும் என்ன தேவையோ அதை சிறப்பாக செய்து இருந்தார். 


 



சிந்து மேனன் அதுவரை நடித்த படங்கள் அனைத்தின் வெற்றியையும் தூக்கி சாப்பிட்டுவிட்டது 'ஈரம்' திரைப்படம். இடையில் தமிழ் சினிமாவில் இருந்து விலகி மலையாள படங்களில் கவனம் செலுத்தி வந்த சிந்து மேனன் ஈரம் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்ததையும் அதில் அசாதாரணமான நடிப்பை வெளிபடுத்தியதையும் யாரும் எதிர்பார்க்கவே இல்லை. இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் பிளாக் பஸ்டர் வெற்றி பெற்ற ஈரம். படம் மிக பெரிய வெற்றி படமாக அமைந்தது. இப்படம் மூலம் சிந்து மேனனுக்கு ரசிகர் கூட்டம் பன்மடங்கு பெருகியது. தமிழ் படங்களை காட்டிலும் கன்னடம் மற்றும் மலையாள படங்களில் தான் அதிக அளவில் நடித்துள்ளார் சிந்து மேனன். ஈரம் படத்திற்கு பிறகு தமிழில் வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை. அவர் மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுக்க வேண்டும் என விருப்பப்படுகிறார்கள் அவரின் ரசிகர்கள்.