''நான் சென்னையின் பல்லாவரத்து பொண்ணு'' என பல விழா மேடைகளில் பெருமையாக சொல்லி க்யூட்டாக சிரித்த சமந்தா இன்று ஒரு ஸ்டார் குடும்பத்தின் மருமகள். இன்று தென் இந்தியாவின் முக்கிய நடிகையாக வலம் வரும் சமந்தாவுக்கு ஆரம்பக்காலங்களில் தமிழ் சினிமா பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. கல்லூரி காலத்திலேயே மாடலிங் வாய்ப்பு, விளம்பரங்களில் நடிப்பு என திரைவாழ்க்கைக்கான அடித்தளமிட்டாலும் தமிழ்த்திரையுலகில் கால்பதிக்க அவருக்கு காலம் எடுத்தது. விளம்பரங்களில் சமந்தாவின் துடிப்பான நடிப்பைக் கண்ட ஒளிப்பதிவாளர் ரவி வர்மன், அவரை மாஸ்கோவின் காவேரி படத்தில் ஒப்பந்தம் செய்தார். அதுதான் சமந்தாவின் முதல் படம். ஆனால் திரையில் சமந்தா தோன்றியது விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம். 




தமிழில் சிறிய வேடம் என்றாலும், அப்படத்தின் தெலுங்கு வெர்ஷனில் சமந்தா நாயகியாக கால்பதித்தார். முதல் படத்திலேயே தெலுங்கு ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். அந்த திரைப்படமே அவரை ஸ்டார் குடும்பத்தின் மருமகளாகவும் ஆக்கியது. அப்படத்தில் நடித்த நாக சைதன்யாவுடன் காதல் ஏற்பட்டு 2017ல் அவரை மணந்தார் சமந்தா. சென்னை பெண் என்றாலும் தன்னுடைய திரைவாழ்க்கையை அழுத்தமாக தெலுங்கில் தொடங்கினார். அதன் பின்னர் அவர் தெலுங்கில் ஒரு ரவுண்ட் வந்தார். பிருந்தாவனம், மகேஷ்பாபுவின் தூக்குடு போன்ற படங்கள் தெலுங்கில் மெகா ஹிட் அடித்தன. இந்தப்படங்கள் சமந்தா ஒரு தவிர்க்க முடியாத நாயகி என்றே தெலுங்கில் பதியவைத்தன. தெலுங்கில் அசுரவளர்ச்சி அடைந்தாலும் தமிழில் சரியான தொடக்கமின்றி தவித்தார் சமந்தா, அவருக்கு கைகொடுத்தது தெலுங்கு டப்பிங் படம் தான். நான் ஈ மூலம் தமிழில் வலம் வந்த ஈகா திரைப்படம் மூலம் தமிழிலும் அறியப்பட்டார் சமந்தா. 




அந்த நேரத்தில் பெரிய இயக்குநர்களின் வாய்ப்புகள் சமந்தாவை தேடி வந்தன. சங்கரின் ஐ, மணி ரத்னத்தின் கடல் திரைப்படங்கள் வாய்ப்பாக வந்தபோது தோல் ஒவ்வாமையால் வாய்ப்புகளை நிராகரித்தார் சமந்தா. அதன் பின்னர் நீதானே என் பொன்வசந்தம் திரைப்படத்தில் நாயகியாக நடித்து தன்னுடைய நடிப்புத்திறமையை தமிழ்த்திரையுலகுக்கு காட்டினார். அதன்பின்னர் சமந்தாவை தமிழில் கவனிக்கவைத்த திரைப்படம் அஞ்சான். படம் பெரிய அளவில் ஹிட் அடிக்கவில்லை என்றாலும் சமந்தாவுக்கு ஒரு நல்ல எண்ட்ரியாக அமைந்தது. அதன்பின்னர் கத்தி திரைப்படத்தின் விஜய் உடன் நடித்து தெலுங்குக்கு இணையான இடத்தை தமிழில் பிடித்தார். பின்னர் இடையிடையே தமிழில் சில படங்கள் சமந்தாவுக்கு கைகொடுக்கவில்லை என்றாலும் தெறி, மெர்சல் போன்ற விஜய்-சமந்தா கூட்டணி ஹிட் அடித்தன. அதன்பின்னர் யூடர்ன், ஓ பேபி, சூப்பர் டீலக்ஸ், இரும்புத்திரை போன்ற படங்களில் கவனிக்க வைத்தார் சமந்தா. இந்தி, மலையாளம் என்ற பூர்வீகத்தை உடைத்து தமிழ் பேசும் நம்ம ஊர் பெண் என்ற தனித்துவத்தால் எளிதில் ரசிகர்களை கவர்ந்தார் சமந்தா.




நடிப்பதோடு மட்டும் நின்றுவிடாமல் சமூக சேவையிலும் தன் பங்கை செலுத்தி வருகிறார் . ஏழைக்குழந்தைகளின் மருத்துவ செலவுக்காக தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் அவர்.  ஆட்டோ ஓட்டி தன்னுடைய 7 சகோதரிகளை காப்பாற்றி வரும் பெண்ணுக்கு ரூ.12 லட்சம் மதிப்பில் கார் பரிசாக வழங்கி ட்ராவல்ஸ் தொடங்க உதவி செய்தது சமீபத்திய வைரல் .  மாடலிங் டூ தவிர்க்க முடியாத தென்னிந்திய நடிகை என தனக்கென ஒரு பாதையை உருவாக்கி வெற்றி பெற்ற சமந்தாவுக்கு இன்று 34வது பிறந்ததினம்.




போட்டோஷூட், உடற்பயிற்சி, மாடித்தோட்டம் என தன் ரசிகர்களுடன் எப்போதும் ஆக்டீவாக சோஷியல் மீடியாவில் இணைந்திருக்கும் சமந்தாவுக்கு இன்று வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. மகாராணியாக சமந்தாவை குறிப்பிட்டு காமென் டிபி வெளியிட்டு ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகைச் சேர்ந்த பலரும் சமந்தாவுக்கு வாழ்த்துகளை பதிவிட்டு வருகின்றனர்.