மற்ற துறைகளை போலவே திரைதுறையிலும் அவ்வப்போது சண்டை சச்சரவுகள், கருத்து வேறுபாடு காரணமாக மோதல் நடைபெற்று கொண்டே இருக்கிறது. அதிலும் கொரோனா கலாட்டத்தில் திரைத்துறை மிகவும் பாதிக்கப்பட்டதால் ஓடிடி தளங்களின் வருகை அதிகரிக்க துவங்கியது. இதனால் திரைத்துறை வளர்ச்சி கண்டாலும் திரையரங்கில் வெளியாவதற்கு முன்னரே ஓடிடி தளங்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதனால் படம் திரையரங்கில் வெளியான ஒரு சில நாட்களிலேயே ஓடிடியில் வெளியாகி விடுகிறது.
தற்போதைய சூழலில் ஆண்டுக்கு நூற்றுக்கணக்கான படங்கள் வெளியாகி வந்தாலும் அதில் விரல் விட்டு எண்ணும் அளவிலான படங்கள் மட்டுமே வெற்றி பெறுகின்றன. இப்படியான சூழலில் நடிகர் நடிகைகளுக்கு சம்பளமும் பல மடங்காக உயர்ந்துவிட்டது. அதனால் நடிகர் நடிகைகள் ஒரே நேரத்தில் பல படங்களில் கமிட்டாகி அட்வான்ஸ் பணத்தை பெற்றுக் கொண்டு விடுகிறார்கள். அதனால் கால்ஷீட் பிரச்சினை ஏற்படுவதுடன் அது தயாரிப்பாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி நஷ்டமடைய செய்கிறது.
இந்த பிரச்சினைக்கு ஒரு முடிவு வர வேண்டும் என்பதற்காக தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க சங்கம் உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றுகூடி கூட்டம் ஒன்றை நடத்தினர். அதில் சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. அதை திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் அறிக்கையாக வெளியிட்டனர். அதில் முக்கியமாக 6 தீர்மானங்கள் இடம் பெற்று இருந்தன.
முன்னணி நடிகர்களின் படங்கள் எட்டு வாரங்களுக்கு பிறகே ஓடிடியில் வெளியிடப்படும். புதிய படங்கள் ஆரம்பிக்கும் முன் எடுக்கப்பட வேண்டிய நடைமுறைகள், சம்பளம், செலவுகள், முறைப்படுத்துதல் உள்ளிட்டவையை மறுசீரமைப்பு பற்றி கலந்தாலோசிப்பதற்காக நடப்பு ஆண்டு நவம்பர் 1ம் தேதி வரை படப்பிடிப்பு பணிகளை நிறுத்த வேண்டும். ஆகஸ்ட் 16 முதல் 24 வரையிலான காலகட்டத்தில் புதிய படங்களின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்படவேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்களை அறிக்கையில் வெளியிட்டு இருந்தனர்.
மேலும் நடிகர் தனுஷ் பல தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸ் பணத்தை பெற்றுள்ளதால் இனி அவர் புதிய படங்களின் பணிகளை துவங்குவதற்கு முன்னர் கலந்தாலோசிக்க வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருத்தது.
இந்த அறிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர் நடிகர் சங்கம். நடிகர் சங்கத்தை கலந்து ஆலோசிக்காமல் எப்படி அறிக்கையை வெளியிடலாம் என பத்திரிகையாளர்களை சந்தித்து பேசி இருந்தனர் நடிகர் சங்கத்தின் துணை தலைவர்கள்.
பல லட்சம் பேர் சினிமா துறையை நம்பி இருப்பதால், திரைத்துறையில் ஏற்படும் கருத்து வேறுபாடு அனைவரையும் பாதிக்கும் என்பதால் அனைவரும் ஒன்றுகூடி கலந்தாலோசித்து விரைவில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்பதே சினிமா ஆர்வலர்களின் வேண்டுகோளாக உள்ளது.