தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் யுவன் சங்கர்ராஜா. தனது தனித்துவமான இசை மூலமாக பல நெஞ்சங்களை கட்டுப்போடும் மாயாஜாலக்காரர் யுவன். இவரை யு1 என ரசிகர்கள் செல்லமாக அழைப்பதுண்டு. யுவன் அவ்வப்போது தனது இசையில் நடிகர்களை பாட வைப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். இந்த நிலையில் யுவன் சங்கர்  இசையில் உருவான ஒரு பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. யுவனும் சிம்புவும் நீண்ட கால நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இவர்கள் இருவரின் கூட்டணியில் வெளியான படங்களின் பாடல்கள் செம ஹிட்.  மன்மதன்’, ‘வல்லவன்’, ‘சிலம்பாட்டம்’, ‘வானம்’ போன்ற சிம்பு படங்களுக்கு யுவன்தான் இசை. இந்நிலையில் சிம்பு நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் உருவாகிவரும் மாநாடு படத்திற்கும் யுவன் சங்கர் ராஜாதான் இசையமைத்துள்ளார்.



தற்போது யுவன் உருவாக்கியுள்ள ஆல்பம் சாங் ஒன்றில் , தனது நெருங்கிய நண்பரான நடிகர் சிம்புவை பாட வைத்துள்ளார். இந்த ஆல்பம் பாடலில் , காளிதாஸ் ஜெயராம் மற்றும் மேகா ஆகாஷ் ஆகியோர் நடித்துள்ளனர். பாடலில் இடம்பெறும் நடன காட்சிகளை பிக்பாஸ் புகழ் சாண்டி மாஸ்டர் இயக்கியுள்ளார். தற்போது எடிட்டிங் பணியில் உள்ள பாடல் விரைவில் யுவனின் யுடியூப் பக்கத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக சிம்பு இசையமைப்பாளராகவும், பாடகராகவும் களமிறங்கியிருந்தார். அதன்பிறகு சிறு சலசலப்பு ஏற்படவே , மீண்டும் உடல் எடை குறைத்து முழு மூச்சில் நடிப்பில் களமிறங்கிவிட்டார். 



மாநாடு படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கும் சிம்பு  தற்பொழுது கௌதம் வாசுதேவ் மேனனுடன் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளார்.  விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா  போன்ற படங்களை தொடர்ந்து கவுதம் வாசுதேவ் மேனன் - சிம்பு மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். தற்போது உருவாக உள்ள இந்த புதிய படத்தின் பெயர் “நதிகளிலே நீராடும் சூரியன்” என கவித்துமாக அமையப்பெற்றுள்ளது.  இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர கன்னடத்தில் வெளியான ஹிட் படமான மஃப்டி என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கிறார் சிம்பு . ஏற்கனவே படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் தொடங்கப்பட்ட நிலையில், படத்தை விரைந்து முடிக்க இயக்குநர் கிருஷ்ணா வேலைகளை முடுக்கிவிட்டுள்ளாராம். இது தவிர இயக்குநர் ராம் மற்றும் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் என அடுத்தடுத்த படங்களில்  சிம்பு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது