உலகமே ரஜினிகாந்தை சூப்பர் ஸ்டாராக கொண்டாடி வரும் வேளையில் அவர் வீட்டு சூப்பர் ஸ்டார் யார் என்ற உண்மை வெளிவந்துள்ளது.
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்படும் ரஜினிகாந்த் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து 47 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. 1975 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியான பாலசந்தர் இயக்கத்தில் உருவான அபூர்வ ராகங்கள் படத்தில் அறிமுகமான ரஜினி, வயதில் 71 ஆண்டுகளை பூர்த்தி செய்தாலும் இன்றளவும் தமிழ் சினிமாவின் கிங் மேக்கராகவே உள்ளார். தவிர்க்க முடியாத உச்சநட்சத்திரமாக விளங்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பு ஆகஸ்ட் 22 ஆம் தேதி தொடங்கவுள்ளது.
சினிமாவில் ரஜினி கடந்து வந்த பாதை என்பது மிக சுலபமானது இல்லை. ஆனால் தனது ஸ்டைல் மூலம் ரசிகர்களை அவர் எளிதில் கவர்ந்தார். பல வெற்றி, தோல்விகளைப் பார்த்த அவர் மற்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார். இயற்பெயரை சிவாஜி ராவ் என்ற நிலையில் தனது பெயரை ரஜினியாக மாற்றிக் கொண்டார். கமர்ஷியல் படங்களில் நடித்தாலும் முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை போன்ற படங்கள் அவர் ஒரு சிறந்த நடிகர் என்பதை நிரூபித்தன.
பாலச்சந்தர் பட்டறையிலே பட்டை தீட்டப்பட்ட ரஜினி பல இடங்களில் தனது குருநாதர் பாலசந்தரை நினைவு கூர்ந்துள்ளார். அரசியல் சர்ச்சை, தனது மகள்களின் விவாகரத்து, தன்னை சுற்றி பல நெகட்டிவான சம்பவங்கள் தொடர்ந்தாலும் ரஜினி என்றும் பாசிட்டிவ் மனிதராகவே உள்ளார். அதனால் பிற நடிகர்களின் ரசிகர்களுக்கும் அவரை பிடிக்கிறது.
இதனிடையே ரஜினியின் 47 ஆண்டுகால சினிமா வாழ்க்கையை கொண்டாடும் வகையில் ரஜினியின் மூத்த மகளும், இயக்குநருமான ஐஸ்வர்யா நேற்றைய தினம் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், 47 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் கடின உழைப்பு.. அர்ப்பணிப்பு..அவருக்கு மகளாக பிறந்ததில் பெருமை என தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து ரஜினி தன் மனைவி லதாவுடன் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.
இந்நிலையில் இந்த புகைப்படங்களை பதிவிட்டு ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், எங்கள் லவ்லி ஜில்லும்மா... அப்பாவின் மிகப்பெரிய ரசிகை மற்றும் எங்கள் வீட்டு சூப்பர் ஸ்டார் லதா ரஜினிகாந்த் என தெரிவித்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் லதா மட்டுமல்ல நாங்களும் மிகப்பெரிய ரசிகர் தான் என தெரிவித்துள்ளனர்.