இந்திய திரையுலகின் சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரது இரண்டாவது மகள் செளந்தர்யா ரஜினிகாந்த்(Soundarya Rajinikanth). இவரது கணவர் பெயர் விசாகன். இந்த நிலையில, விசாகன் – சௌந்தர்யா தம்பதியினருக்கு நேற்று இரவு ஆண் குழந்தை பிறந்துள்ளது.


இந்த நற்செய்தியை சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், அவர் தனது குழந்தையின் கை விரலை பகிர்ந்துள்ளார். மேலும், அந்த புகைப்படத்திற்கு கீழே அபரிமிதமான கடவுள் அருளுடனும், எங்கள் பெற்றோர்கள் ஆசிர்வாதத்துடனும் வேதின் தம்பியை வரவேற்பதில் விசாகன், வேத் மற்றும் நானும் மகிழ்ச்சியடைகிறோம் என்று பதிவிட்டுள்ளார்.






மேலும், புதியதாக பிறந்த குழந்தைக்கு வீர் ரஜினிகாந்த் வணங்காமுடி என்றும் பெயர் சூட்டியுள்ளனர். மருத்துவர்கள் சுமனா மனோகர், ஸ்ரீவித்யா சேஷாத்ரி ஆகியோருக்கும் மிகப்பெரிய நன்றி என்றும் பதிவிட்டுள்ளனர். ரஜினிகாந்த்திற்கு பேரன் பிறந்ததையடுத்து, அவரது ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் சௌந்தர்யா ரஜினிகாந்திற்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.


செளந்தர்யா ரஜினிகாந்த் கிராபிக் டிசைனர், படத் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் என்று பன்முகம் கொண்டவர். இவரின் முதல் திருமணம் விவகாரத்தில் முடிந்ததையடுத்து, இவர் தொழிலதிபர் விசாகனை கடந்த 2019ம் ஆண்டு இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. சௌந்தர்யா ரஜினிகாந்திற்கு ஏற்கனவே வேத் கிருஷ்ணா என்ற மகன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


ஆண் குழந்தை பிறந்துள்ள சௌந்தர்யா ரஜினிகாந்திற்கு திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.