கருடன்
விடுதலை படத்தில் நாயகனாக அறிமுகமான சூரி தற்போது நடித்துள்ள படம் கருடன் . துரை செந்தில்குமார் இயக்கியுள்ள இப்படத்தில் சசிகுமார் , உன்னி முகுந்தன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் . விடுதலை படத்தில் வெற்றிமாறனின் கதாநாயகனாக நடித்த சூரியை மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் முதல் முறையாக சூரி ஆக்ஷன் ஹீரோவாக களமிறங்கியிருக்கும் படம் கருடன் . கடந்த மே 31 ஆம் தேதி வெளியாகிய கருடன் படம் அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் செம பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றது. முதல் நாளில் படத்திற்கு கிடைத்த சாதகமான விமர்சனங்களைத் தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் திரையரங்குகளில் மக்களில் வரவு அதிகரித்துள்ளது. இப்படியான நிலையில் கருடன் படத்தின் முதல் முன்று நாள் வசூல் நிலவரங்கள் வெளியாகியுள்ளன.
கருடன் பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்ஷன்
கருடன் படம் திரையரங்கில் வெளியான முதல் நாளில் உலகளவில் 4.2 கோடி வசூலித்தது. இந்த ஆண்டு வெளியான படங்களில் முதல் நாளில் அதிகப் படியான வசூல் ஈட்டிய படங்களின் வரிசையில் கேப்டன் மில்லர் , கில்லி , அரண்மனை 4 முதலிய படங்களுக்கு அடுத்து நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது கருடன். அடுத்த இரண்டு விடுமுறை நாட்களில் படத்திற்கு கூட்டம் அதிகரிக்க படத்தின் வசூலும் இரு மடங்காக அதிகரித்துள்ளது . அதன்படி இரண்டாவது நாளில் கருடன் படம் ரூ 5.65 கோடி, மூன்றாவது நாளில் உலகளவில் ரூ 7.35 கோடி வசூலித்துள்ளது. மொத்தமாக முதல் மூன்று நாட்களில் கருடன் படம் 16.8 கோடி வசூலித்து இந்த ஆண்டில் முதல் வாரத்தில் அதிக வசூல் ஈட்டிய படங்களில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
அடுத்து வரக்கூடிய நாட்களில் சூரியின் கருடன் தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் படத்தின் வசூலை முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. தமிழில் முன்னணி நடிகர்களின் படங்கள் தத்தளித்து வரும் நிலையில் சூரியின் படத்திற்கு இவ்வளவு பெரிய வாய்ப்பு கிடைத்துள்ள நிலையில் சூரியின் அடுத்தடுத்தப் படங்களுக்கு பெரிய வரவேற்பு இருக்கும் என்று நிச்சயமாக எதிர்பார்க்கலாம்