தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் எனப்படும் சைமா விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்தாண்டு இந்த விருது வழங்கும் விழா ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், சைமா விருதுகள் வழங்கும் விழா ஹைதராபாத்தில் நேற்று முன் தினம் நடைபெற்றது.


இதில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று திரைப்படம் 7 விருதுகளை வென்றுள்ளது. இது குறித்து ட்வீட் செய்துள்ள  சூர்யாவின் 2டி நிறுவனம் அன்பான ரசிகர்களுக்கு, சைமாவின் நடுவர்களுக்கும் நன்றி. சூரரைப் போற்று மொத்தமாக 7 விருதுகளை வென்றுள்ளது.   அதன்படி சிறந்த நடிகருக்கான விருதை சூர்யாவும், சிறந்த திரைப்படமாக சூரரைப் போற்றும் தேர்வாகியுள்ளது. அதேபோல சிறந்த இயக்குநராக சுதா கங்கோராவும், சிறந்த நடிகையாக அபர்ணாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதேபோல  சிறந்த இசையமைப்பாளராக ஜிவி பிரகாஷ், சிறந்த நடன இயக்குநர் நிகெத் பொம்மியும், சிறந்த பாடகராக வெய்யோன் சில்லி பாடலுக்கு ஹரிஷ் சிவராமகிருஷ்ணனும் தேர்வு செய்யப்பட்டுளனர்.  




7 விருதுகளை குவித்துள்ள சூரரைப் போற்று குழுவுக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.  சுதா கொங்கரா இயக்கத்தில் உண்மை கதையினை மையமாக கொண்டு சூர்யாவினை வைத்து இயக்கிய திரைப்படம் தான் சூரரைப்போற்று. கிராமத்தில் பிறந்து எப்படியாவது விமானத்தினை இயக்கி விட வேண்டும் என்று துடிப்புடன் கதாநாயகனாக வலம் வரும் நடிகர் சூர்யா, எப்படி வெற்றி பெறுகிறார் என்பர் தான் கதைக்களம். கதாநாயகியாக மலையாள நடிகை அபர்ணா பாலமுரளி சிறப்பாக நடிப்பினை வெளிப்படுத்தி இருந்தார்.  இப்படம்  ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தில் இருந்து சிலப் பகுதிகளை எடுத்துக்கொண்டு தமிழ் மொழியில் மட்டுமல்லாமல், கன்னடம், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியான சூரரைப்போற்று ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்பட்டது. ஒடிடி தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பினை பெற்றது.  


முன்னதாக, மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில்  சிறந்த திரைப்படத்துக்கான விருதை சூரரை போற்று பெற்றது. அதேபோல் சிறந்த நடிகருக்கான விருதை சூரரை போற்று திரைப்படத்துக்காக சூர்யா பெற்றார்.