தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யாவின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான ஒரு மாஸ்டர் பீஸ் படமாக அமைந்தது சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான 'சூரரைப் போற்று' திரைப்படம். சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் கீழ் 2020ம் ஆண்டு வெளியான இப்படம் அந்த ஆண்டுக்கான தேசிய விருதுகளை 5 பிரிவுகளின் கீழ் கைப்பற்றியது. குறைந்த செலவில் அனைத்து தரப்பு மக்களும் விமான சேவை வசதியை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் விமானி ஜி.ஆர்.கோபிநாத் சொந்த விமான நிறுவனத்தை எடுத்துக் கொண்ட முயற்சியை மையமாக வைத்து இப்படம் இயக்கப்பட்டிருந்தது. கொரோனாவால் முடங்கி போயிருந்த திரையுலகிற்கு மிகவும் தேவையான ஒரு வெற்றியாக அமைந்தது 'சூரரைப் போற்று' திரைப்படத்தின் வெற்றி.  


 




நேரடியாக ஓடிடி தளத்தில் :


கொரோனா காலகட்டத்தில் வெளியானதால் இப்படம் நேரடியாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் நேரடியாக  வெளியானது. சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, கருணாஸ், காளி வெங்கட், விவேக் பிரசன்னா, மோகன் பாபு, கிருஷ்ணகுமார் மற்றும் பலர் நடித்திருந்தனர். வித்தியாசமான வில்லனாக பரேஷ் ராவல் நடித்திருந்தார்.  ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார். படம் வெளியாவதற்கு முன்னரே இப்படத்தின் பாடல்கள் எல்லாம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதையும் கைப்பற்றினர் ஜி.வி. பிரகாஷ். 


 



 


இந்தி ரீமேக் :


தமிழில் நல்ல வரவேற்பையும் தேசிய விருதையும் பெற்ற 'சூரரைப் போற்று' திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. நெடுமாறன் ராஜாங்கம் என்ற கேரக்டரில் நடிகர் சூர்யா நடித்த கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடித்துள்ளார். அபர்ணா பாலமுரளி நடித்த கதாபாத்திரத்தில் ராதிகா மதன் நடித்துள்ளார். இப்படத்தில் நடிகர் சூர்யா கேமியோ ரோலிலும், நடிகர் சரத்குமார், பரேஷ் ராவல் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர் என கூறப்படுகிறது. இந்தி ரீ மேக்கிற்கும், ஜி.வி. பிரகாஷ் குமார் தான் இசையமைத்துள்ளார். 


 





ரிலீஸ் தேதி அறிவிப்பு : 


கடந்த ஆண்டு வெளியாக இருந்த இப்படம் ஒரு சில காரணங்களால் வெளியாகாமல் ஒத்திவைக்கப்பட்டது. அந்த வகையில் மிகவும் எதிர்ப்பது காத்திருந்த சூரரைப் போற்று ஹிந்தி ரீ மேக் படத்திற்கு 'சர்ஃபிரா' என தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படம் வரும் ஜூலை 12ம் தேதி வெளியாக உள்ளது என்ற அதிகாரபூர்வமான அறிவிப்பை சுதா கொங்கரா தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.