தமிழ்சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் தற்போது வினோத் இயக்கும் ஏகே 61 படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தை முடித்த கையோடு அடுத்ததாக இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் நடிக்கிறார்.இந்தப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த நிலையில் இந்தப்படத்தை தொடர்ந்து அஜித், சுதா கொங்கரா இயக்கும் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக சுதா கொங்கரா இயக்கும் படத்தை கே.ஜி. எஃப் படத்தை தயாரித்த ஹோம்லே ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. உண்மை சம்பவங்களை மையப்படுத்தி உருவாக்கப்படும் இந்தப்படத்தில்தான் நடிகர் அஜித் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. சுதாகொங்கரா அடுத்ததாக சூர்யாவை இயக்கும் நிலையில், அந்தப்படங்களுக்கான வேலைகளில் மும்மரமாக ஈடுபட்டு வருகிறார்.
யார் இந்த சுதா கொங்கரா?
இயக்குனர் மணிரத்னம் மற்றும் பாலாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சுதா கொங்கரா தமிழில் துரோகி என்ற படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். அதன்பின்னர், கடந்த 2016ம் ஆண்டு இறுதிச்சுற்று என்ற படத்தை இயக்கியிருந்தார். அந்த படம் மாபெரும் வெற்றி பெற்றதையடுத்து, சூர்யாவை வைத்து சூரரைப் போற்று படத்தை இயக்கினார். அமேசான் ஓடிடி தளத்தில் வெளியான இந்த படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. இதனையடுத்து சுதா கொங்கரா தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக உயர்ந்தார். அதனைத்தொடர்ந்து நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான ‘பாவகதைகள்’ என்ற ஆந்தாலஜி படத்தில் தங்கம் என்ற குறும்படத்தை இயக்கினார். இதுவும் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.