சுதா கொங்காரா


சாவர்க்கரை புகழ்ந்து பேசியது தவறு எனவும் அந்த தவறுக்கு நான் மன்னிப்பு கோருகிறேன் எனவும் இயக்குநர் சுதா கொங்கரா தெரிவித்துள்ளார். 


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ”என் 17வது வயதில் எனது வகுப்பு ஆசிரியர் சொன்னதை வைத்து நான் சாவர்க்கரை புகழ்ந்து பேசிவிட்டேன். ஒரு வரலாற்று மாணவியாக ஆசியரியர் கூறியதன் உண்மைத் தன்மையை நான் சோதித்திருக்க வேண்டும். நேர்காணலில் நடந்தது எனது தவறுதான். எதிர்காலத்தில் அப்படி நேராது என உறுதியளிக்கிறேன். ஒருவருடைய புகழை இன்னொருவருக்கு தர வேண்டும் என்ற நோக்கம் எனக்கு இல்லை. எனது பேச்சில் இருந்த பிழையை சுட்டிக்காட்டியவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். சீர்திருத்தவாதிகள் ஜோதிபா, சாவித்திரிபாய் புலே ஆகியோருக்கு என்றும் தலைவணங்குகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 


சாவர்க்கர் குறித்து சுதா கொங்காரா


சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய சுதா கொங்காரா  “ நான் ஒரு வரலாற்று மாணவி. கல்லூரியில் வுமன் ஸ்டடீஸ் படித்தபோது என்னுடைய அசிரியர் சாவர்க்கரைப் பற்றி ஒரு தகவலை சொன்னார் . சாவர்க்கர் ஒரு பெரும் தலைவர். அனைவராலும் மதிக்கப்படுபவர். அவர் திருமணம் முடிந்தபின்னும் தனது மனைவியை தொடர்ச்சியாக படிக்கச் சொல்லி வலியுறுத்தியபடியே இருந்தார். ஆனால் அவரது மனைவிக்கு வீட்டில் இருக்கதான் பிடித்திருந்தது. ஏனென்றால் அந்த காலத்தில் பெண்கள் பள்ளிக்கு படிக்கச் செல்வது வழக்கம் இல்லை. படிக்கச் செல்லும் பெண்களை தெருவில் இருப்பவர்கள் அனைவரும் கேலி செய்ததால் சாவர்க்கரின் மனைவி அழுதுகொண்டு பள்ளிக்கு போகமாட்டேன் என்று கூறியிருக்கிறார். தனது மனைவியின் கையைப் பிடித்து சாவர்க்கர் அவரை பள்ளிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். இது சரியா தவறா என்பதில் இருந்து எனக்குள் நிறைய கேள்விகள் எழுந்தன” என்று சுதா கொங்காரா பேசியிருந்தார்


விமர்சனங்கள்


சுதா கொங்காரா பேசிய இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானதைத் தொடர்ந்து அவர் மீது நிறைய விமர்சனங்கள் எழுப்பப்பட்டன. சாவர்க்கரைக் காட்டிலும் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த ஜோதிராவ் புலே மற்றும் சாவித்தி பாய் புலே பெண்கள் கல்வி கற்கபதற்கு பல்வேறு போராட்டங்களை எதிர்கொண்டிருக்கிறார்கள். சாவித்திரிபாய் புலே குழந்தைக்கு கற்பிக்க பள்ளிக்குச் செல்லும் போது அவர் செல்லும் வழியில் இருந்தவர்கள் அவர்மீது மலத்தை வீசியிருக்கிறார்கள். இதை எல்லாம் விட்டுவிட்டு சாவர்க்கரை புகழ்வது எப்படி சரியாகும் என்று பலர் கேள்வி எழுப்பினர். இந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் தான் தற்போது சுதா கொங்காரா மன்னிப்பு கேட்டுள்ளார்.