'சூ' சொல்லிட்டு போ என்று வடிவேலுவிடம் ஓரண்டை இழுத்த பாட்டியை இங்கு யாரும் மறந்திருக்க மாட்டோம். வடிவேலுவுடன் அத்தனை படங்களில் இணைந்து நம்மை குலுங்க குலுங்க சிரிக்கவைத்திருக்கிறார். அது மட்டுமின்றி பல திரைப்படங்களிலும் வயதான காதபாதிறங்கள் ஏற்று நடித்திருக்கிறார்.


கோவை மாவட்டம் அண்ணூர் தான் ரங்கம்மா பாட்டியின் சொந்த ஊர். எம்.ஜி.ஆர் நடித்து வெளிவந்த விவசாயி படம் தான், ரங்கம்மா பாட்டி நடித்த முதல் படம். அப்போது நடிக்க ஆரம்பித்தவர், அஜித், விஜய், சூர்யா, விக்ரம் விஷால், விக்ரம் பிரபு, ராகவா லாரன்ஸ்,  வடிவேலு என ஏராளமான நடிகர்களுடன் நடித்துள்ளார். பல்வேறு மொழிகளில், ஏறக்குறைய 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ரங்கம்மா பாட்டிக்கு எம்.ஜி.ஆர் பாட்டி என்றால் உயிர். அவரின் படத்தை கையில் பச்சை குத்தும் அளவுக்கு அவருக்கு எம்.ஜி.ஆர் மீது தீராத பற்று கொண்டவர். எம்.ஜி.ஆர் எப்போதும் உதவி கேட்டு வருபவர்களுக்கு இல்லையென்று ஒருபோதும் சொன்னதில்லை. அவரது இந்த குணம் தான் ரங்கம்மா பாட்டிக்கு அவரை பிடித்து போக காரணம். ரங்கம்மா பாட்டி எம்.ஜி.ஆருடன் மட்டுமே ஏழு படங்களில் நடித்துள்ளார். அதனால் தான், தன்னிடம் யாராவது உதவி என்று கேட்டு வந்தால்கூட, ரங்கம்மா பாட்டி தன் கையில் இருப்பதையெல்லாம் கொடுத்து உதவியுள்ளார். அதன் பலனாக இன்று யார் ஆதரவுமில்லாமல், , சின்ன சின்ன பொருட்களை விற்று அன்றாட பிழைப்பை நடத்தி வருகிறார்.



87 வயதாகி வீட்டில் தனிமையில் வாடும் ரங்கம்மா பாட்டியிடம் ஒரு தனியார் யூடியூப் சேனலில் இருந்து பேட்டி எடுத்துள்ளனர். அதில் பார்ப்பதற்கு குடோன் போல் காட்சியளிக்கும் சிறிய அறையில் ஒரே ஒரு கட்டிலுடன் எந்த வசதிகளும் இல்லாமல், ரங்கம்மா பாட்டி வாழ்ந்து வருகிறார். ரங்கம்மா பாட்டிக்கு மொத்தம் 12 பிள்ளைகள், அதில் இரண்டு பேர்தான் இப்போது இருக்கின்றனர். அவர்களும் கஷ்டத்தில் இருக்கின்றனர். ரங்கம்மா பாட்டி கடந்த சில மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது கையில் சேமித்து வைத்திருந்த சிறிய தொகையும் செலவாகியுள்ளது. இந்த நிலையிலும் கர்சீப், சோப்பு, கீ செயின் உள்ளிட்டவற்றை விற்றுதான் தன் அன்றாட வாழ்க்கையை நடத்தி வருகிறார். முன்பு மெரினா கடற்கரையில் விற்றுக் கொண்டிருந்தார். ஆனால் இப்போது அங்கு அனுமதியில்லை என்பதால், வீட்டிலேயே பொருட்களை விற்று பிழைப்பு நடத்தி வருகிறார். எம்ஜிஆர் பாடிய உழைத்து வாழ வேண்டும் என்ற பாடலை தன் வாழ்வில் ஒரு தவம் போல ரங்கம்மா பாட்டி கடைபிடித்து வருகிறார்.



இவருக்கு இயக்குநர் ஹரி மட்டும், மாதம் 2 ஆயிரம் ரூபாய் கொடுத்து உதவி செய்து வருகிறார். அதை யாரிடமும் சொல்லக்கூடாது என கண்டீஷனும் போட்டிருக்கிறார். ரங்கம்மா பாட்டி குணச்சித்திர நடிகை மட்டுமல்ல, அவர் பழைய படங்களில் நடிகைகளுக்கு டூப் போட்டிருக்கிறார்.  ஒருவேளை நீங்கள் அடுத்தமுறை கவிஞர் கண்ணதாசனின் பிரபல பாடலான, பரமசிவன் கழுத்தி இருந்து பாம்பு கேட்டது பாடலை அடுத்தமுறை கேட்கும்போது, நன்றாக பாருங்கள். அதில் ஜெயலலிதா பக்கத்தில், ரங்கம்மா பாட்டியும் இளமை ததும்ப அமர்ந்திருப்பார். சீவலப்பேரி பாண்டி படத்திலும் நெப்போலியனுக்கு அம்மாவாக நடித்திருக்கிறார்.


ரங்கம்மா பாட்டி துணை நடிகையாக இருந்தபோது, 5 ஆயிரம், 10 ஆயிரம் என சம்பளம் வாங்கியுள்ளார். ஆனால் இப்போது பட வாய்ப்பு இல்லாமல், வாழ்வாதரமும் தொலைந்து போய் தனியே கஷ்டப்பட்டு வருகிறார். ஆனால் இப்போது கூட ரங்கம்மா பாட்டி,  யாராவது நடிப்பதற்கு கூப்பிட்டால் வருவதற்கு தயாராக தான் இருக்கிறார். லாரன்ஸ் மாஸ்டர் மட்டும் என் நிலைமையை பார்த்தால், எனக்கு ஏதாவது உதவி செய்வார். மேலும்  எனக்கு யாராவது உதவி செய்ய வேண்டும் என நினைத்தால் எனது வங்கி கணக்குக்கு பணத்தை அனுப்புங்கள் என்று கூறினார் ரங்கம்மா பாட்டி.



ரங்கம்மா பாட்டியின் மகன் பேசுகையில், என் அம்மா இப்போது மிகவும் உடல்நலம் பாதிப்பட்டு இருக்கிறார். நான் தான் அவரை பார்த்துக் கொண்டிருக்கிறேன். என் அம்மா, யாராவது ஏழை என்று வந்தால் 5 ஆயிரம், 10 ஆயிரம் என கொடுத்து உதவுவார். எம்.ஜி.ஆர் கட்சியிலிருந்து, அவரின் குணம் என் அம்மாவுக்கும் வந்துவிட்டது. அம்மாவும், வடிவேலுவும் நடித்த காமெடிகள்தான் ஹிட்டாகியிருக்கிறது. அவரை நான் ஒரு சிலமுறை சந்தித்துள்ளேன். ஆனால் அவரிடம் நான் எந்த உதவியும் கேட்டதில்லை. அதேபோல லாரன்ஸ் சார்கூட அம்மா சில படங்கள் நடித்திருக்கிறார். லாரன்ஸ் கூட அம்மாவை அவரது ஆசிரமத்திற்கு கூப்பிட்டார். ஆனால் நாங்கள் வேண்டாம் என்று சொல்லிவிட்டோம். நான் லாரி ஓட்டுனராக இருந்தேன். லாரி ஓட்டிக்கூட  அம்மாவை பார்த்துக்கொள்வேன் தம்பி என அவரிடம் சொல்லிவிட்டேன். தங்கைகள் எல்லாம் நல்ல வசதியான இடத்தில் இருக்கிறார்கள். ஆனால் நாங்கள் யாரிடமும் போவதில்லை. நம் உழைப்பில் வாழவேண்டும் என்ற நினைப்பில்தான் இன்றுவரை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அம்மாவுக்கு வெளிநாடுகளில் அதிக ரசிகர்கள் உள்ளனர். உங்களால் முடிந்தால் அம்மாவுக்கு ஏதாவது உதவி செய்யுங்கள்" என்று அவரும் கேட்டுக்கொண்டார்.


சம்பாதித்த பணத்தை எல்லாம் ஏழை, எளியோருக்கு தானம் செய்து, இன்று ஒருவேளை உணவுக்குக் கூட திண்டாடிக் கொண்டிருக்கும் ரங்கம்மா பாட்டிக்கு நம்மால் முடிந்த ஏதாவது ஒரு சிறிய உதவியை செய்யுங்கள். ரங்கம்மா பாட்டி, நம் கவலைகளை மறந்து நம்மை சிரிக்க வைத்த ஒரு கலைஞர். அவருக்கு மரியாதை செய்யவேண்டியது அவசியம். அவர் இயங்கிய சினிமாத்துறை பிரபலங்கள் உதவ முன்வருவது சினிமாத்துறையை நேசிப்பவர்கள் செய்யவேண்டிய கடமை.