தெலுங்கானா மாநிலத்தில் சந்திரசேகர்ராவ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அந்த மாநிலத்தின் பழைய பலோஞ்சாவில் காவல் எல்லைக்குள் வசிப்பவர் மண்டிகா நாகா ராமகிருஷ்ணா. அவரது மனைவி ஸ்ரீலட்சுமி. அவர்களது மகள்கள் சாஹித்யா மற்றும் சாஹிதி. இந்த நிலையில், கடந்த இரண்டாம் தேதி ராமகிருஷ்ணா தனது மனைவி மற்றும் மகள்களுடன் தனது வீட்டிலேயே தீக்குளித்தார்.




இதில், ராமகிருஷ்ணா, அவரது மனைவி ஸ்ரீலட்சுமி, அவர்களது மகள் சாஹித்யா ஆகிய மூன்று பேரும் வீட்டிலேயே உடல் கருகி உயிரிழந்தனர். மற்றொரு மகள் சாஹிதியும் 80 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவனையில் உயிருக்காக போராடி வருகிறார். ராமகிருஷ்ணன் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு அவர் வெளியிட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.


அவர் அந்த வீடியோவில் கூறியிருப்பதாவது, எனது வீட்டில் இருந்து எனக்கு வர வேண்டிய சொத்துக்களை மீட்டுத்தர வேண்டும் என்று, கோதகுடமின் தொகுதி எம்.எல்.ஏ. மகன் வனமா ராகவேந்திரா ராவிடம் சென்றிருந்தோம். அவர் உன்னுடைய பிரச்சனைகளை சரி செய்கிறேன். ஆனால், நீ உனது மனைவியை மட்டும் அழைத்துக்கொண்டு ஹைதராபாத்திற்கு வர வேண்டும் என்றார். என்னால் மட்டும்தான் உன்னுடைய பிரச்சினையை சரி செய்ய முடியும். வேறு எங்கு சென்றாலும், யாரிடம் சென்றாலும் யாரும் உனக்கு உதவ மாட்டார்கள். உன்னால் உன் சொத்துக்களை திரும்ப வாங்க முடியாது என்று கூறினார்.




நாங்கள் திருமணமாகி 12 வருடங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறோம். அவளை நான் பாதுகாப்பதாக நான் சத்தியம் செய்துள்ளேன். என்னால் அவளை அப்படி அனுப்ப முடியாது. இதனால்தான் நான் இந்த முடிவுகளை எடுத்தேன். நான் தவறான குற்றச்சாட்டுக்களை கூறுவதாக மக்கள் நினைக்கலாம். ஆனால், இருட்டில் நடக்கும் இந்த தவறுகளுக்கு புகைப்படங்கள், வீடியோக்கள் எடுக்க முடியாது.”  இவ்வாறு அவர் அந்த வீடியோவில் பேசியுள்ளார்.







தற்கொலை செய்து கொண்ட ராமகிருஷ்ணாவின் குடும்பத்தார் அந்த பகுதியில் மிகவும் அரசியல் செல்வாக்கு வாய்ந்தவர். அதன் காரணமாக, அவரால் அவரது குடும்பத்தாரிடம் இருந்து சொத்துக்களை பெற முடியாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த வீடியோவை ஆதாரமாக வைத்து போலீசார் தற்கொலைக்கு காரணமான கோதகுடம் எம்.எல்.ஏ. மகன் வனமா ராகவேந்திர ராவ், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி தலைவரும். கோதகுடம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான வனமா வெங்கடேஸ்வர ராவ், உயிரிழந்த ராமகிருஷ்ணாவின் தாயார் மற்றும் அவரது சகோதரி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.




ஆனால், அவர்கள் உயிரிழந்த ஒரு வாரத்திற்கும் மேலாகியும் எம்.எல்.ஏ. மகன் இதுவரை கைது செய்யப்படவில்லை என சர்ச்சைகள் வலுக்கின்றன. மேலும், இந்த விவகாரத்தில் தனது மகன் ஒரு அப்பாவி என்று எம்.எல்.ஏ. வனமா வெங்கடேஸ்வர ராவ் அறிக்கை வெளியிட்டுள்ளார். ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வின் மகனால் ஒரு குடும்பமே தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் அந்த மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த சம்பவத்தால் ஆளுங்கட்சியான தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதிக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. எம்.எல்.ஏ. மகன் மீது தொடர்ச்சியாக பதியப்பட்டுள்ள மூன்றாவது வழக்கு இதுவாகும். அவரை கைது செய்யாமல் ஆளுங்கட்சி காப்பாற்றுவதாக அம்மாநில எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.


மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண