இன்று உழைப்பாளர் தினம். எல்லா காலங்களிலும் உழைக்கும் மக்களின் குரலை திரைப்படங்களில் இடம்பெறும் பாடல்கள் பிரதிபலித்து வந்திருக்கின்றன கண்ணதாசன்,பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், பாரதிதாசன் ஆகியவர்களின் வரிகள் தமிழ் சினிமாவின் வரலாற்றில் உழைக்கும் மக்களின் வாழ்க்கையை எடுத்துரைத்த பொற்காலம் என்றே சொல்லலாம். அந்த வகையில் நவீன தமிழ் சினிமாவில் உழைக்கும் மக்களைப் பற்றி வந்த சில அற்புதமான பாடல் வரிகளை பார்க்கலாம்.


உழைப்பாளி இல்லாத நாடுதான் (உழைப்பாளி)


இந்த பட்டியலை ரஜினியில் இருந்து தொடங்கலாம்.உழைப்பாளி இல்லாத நாடு தான் எங்கும் இல்லைங்க என்று இந்த பாடல் தொடங்கும் முதல் வரியிலேயே ஒரு கணம் உலகம் முழுவதும் இருக்கும் உழைப்பாளர்கள் கண் முன் வந்து செல்வார்கள்.இந்தப் பாடலை எழுதியது வாலி.


கண்ணைக் கசக்கும் சூரியனோ ரெட் (ரெட்)


அடுத்ததாக ரெட் படத்தில் இடப்பெற்ற கண்ணை கசக்கும் சூரியனே ரெட் என்கிற பாடல். எஸ் பி பாலசுப்ரமணியனின் கனீரென்ற குரலில் அமைந்த இந்த பாடல் ஒட்டுமொத்த உழைக்கும் மக்களை ஒன்றுதிரள அழைக்கும் முழக்கம் போல ஒலித்தது.வைரமுத்து இதன் பாடலாசிரியர்.


செங்க சூல காரா (வாகை சூட வா)


வெகு நாட்களூக்கு பின்பு தமிழ் சினிமாவில் பலர் மனதை தொட்ட பாடல் என்றான் இந்த பாடலைச் சொல்லலாம்.செங்கல் சூலையில் வேலை பார்க்கும் மக்களின் பாடுகளை உணர்வுப்பூர்வமாக எழுதியிருப்பார் வைரமுத்து.


”அய்யனாரு சாமி அழுது தீர்த்து பாத்தோம்


சொரண கெட்ட சாமி சோத்ததான கேட்டோம்”


என்கிற வரியில் கடவுளை  நேரில் நிறுத்தி கேள்வி கேட்பதுபோன்ற ஒரு உணர்வு கேட்பவருக்கு ஒவ்வொருமுறையும் ஏற்படும்


கருத்தவன்லாம் கலீஜா (வேலைக்காரன்)


இன்று மாபெரும் நகரமாக சென்னை உருவாகியிருக்கிறது.ஆனால் இதை உருவாக்கியவர்கள் எங்கு இருக்கிறார்கள்.உண்மையில் சென்னைக்கு சொந்தக்காரர்கள் யார் என்கிற கேள்வியை கேட்கும் கானா பாடல். சென்னை உருவானதற்கு காரணமான உழைக்கும் வர்க்கத்தை முன்னிறுத்தும் பல வரிகளை இடம்பெறச் செய்திருப்பார் பாடலாசிரியர் விவேகா.


”தாஜ்மகால கட்டுனது கொத்தனாரு


ஷாஜகான் கிட்ட சொன்னாகூட ஒத்துப்பாரு”


”நட்டு குத்தா நிக்குது பாரு ஷாப்பிங் மாலு


அத  நிக்க வச்ச கொம்பன் எங்க குப்பம் ஆளு….”


”சர்ரு புர்ரு காரு…
இங்க ஓடும் பாரு…
இந்த சாலை எல்லாம்…
கண் முழுச்சி போட்டதாரு…”


என்னங்க சார் உங்க சட்டம்(ஜோக்கர்)


ஜோக்கர் படத்தில் இடம்பெற்ற இந்த பாடல் உழைக்கும் மக்கள் தங்களது ஆட்சியாளர்களை கேள்வி கேட்கும் ஒரு துணிச்சலான பாடல்.மக்களுக்கு எந்த விதத்திலும் பயன்படாத சட்டங்களை இயற்றுவதை விமர்சிக்கும் வகையில் இதன் வரிகள் அமைந்துள்ளன.பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா இந்த பாடலை எழுதியவர்.