நடிகர் அஜித்குமார் நடிக்கும் 62வது படத்திற்கு ”விடா முயற்சி” என பெயரிடப்பட்டுள்ளது. நீண்ட இழுபறிக்குப் பிறகு ஒரு வழியாக இப்படத்தின் அறிவிப்பு வெளியானதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். 


நடிகர் அஜித் கடைசியாக துணிவு படத்தில் நடித்திருந்தார். தயாரிப்பாளர் போனிகபூர் - இயக்குநர் ஹெச்.வினோத் கூட்டணியில் அவர் 3வது முறையாக இப்படத்தில் இணைந்திருந்தார். இந்த படம் கடந்த ஜனவரி மாதம் பொங்கலன்று வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து அஜித்தின் 62வது படம் குறித்த அறிவிப்பு கடந்தாண்டு மார்ச் மாதம் வெளியானது. 


அஜித்குமார் 62


அஜித் நடிக்கும் 62வது படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், இப்படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்குவார் எனவும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியிருந்தது.இப்படத்திற்கு அனிருத் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் படத்தின் கதை தயாரிப்பு தரப்பை திருப்தி செய்யாத காரணத்தால் விக்னேஷ் சிவன் அப்படத்தில் இருந்து விலக்கப்பட்டார். 


இதனைத் தொடர்ந்து தடையறத்தாக்க, மீகாமன், தடம், கண்ணை நம்பாதே உள்ளிட்ட பல படங்களை இயக்கிய இயக்குநர் மகிழ்திருமேனி அஜித்தின் படத்தை இயக்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் பல மாதங்களாக அது வெறும் தகவலாக மட்டுமே இருந்ததால் ரசிகர்கள் ஏமாற்ற்றமடைந்தனர்.


அஜித் பிறந்தநாள்


இந்நிலையில் நடிகர் அஜித் இன்று தனது 62வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு ஏராளமான ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைத்தளங்களில் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இப்படியான நிலையில் ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் வகையில் அஜித்தின் அடுத்தப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. எதிர்பார்த்ததைப் போல அவரின் 62வது படத்தை மகிழ்திருமேனி இயக்கவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இந்த படத்திற்கு “விடாமுயற்சி” என பெயரிடப்பட்டுள்ளது. அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்ய உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர். அந்த டைட்டிலின் கீழ் "EFFORTS NEVER FAIL" என கேப்ஷன் இடம் பெற்றுள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் மே மாதம் கடைசி வாரம் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. 


 


கடந்த சில ஆண்டுகளாக அஜித் ஆங்கிலத்தில் “வி” எழுத்தில் தொடங்கும் படங்களில் அதிகமாக நடித்து வருகிறார். அவரின் நடிப்பில் வீரம், விவேகம், வேதாளம், விஸ்வாசம், வலிமை ஆகிய படங்கள் கடந்த 10 ஆண்டுகளில் வெளியாகியிருந்தது. அந்த வகையில் தற்போது “விடாமுயற்சி” படமும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.