பதான் திரைப்படம் பல இடங்களில் ரசிகர்கள் செய்யும் அட்டகாசத்தால் நஷ்டத்தை சந்திக்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியிருப்பதால் படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளது. 


சர்ச்சைகளை சந்தித்த பதான் 


யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள “பதான்” படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார். ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரஹாம் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இப்படம் குடியரசு தினத்தை முன்னிட்டு கடந்த ஜனவரி 25 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியான இப்படம் ரிலீசுக்கு முன்பே பல சர்ச்சைகளில் சிக்கியது.


குறிப்பாக பாடல் காட்சி ஒன்றில் தீபிகா படுகோனே காவி நிறத்தில் நீச்சல் உடை அணிந்து நடனமாடியிருந்தார். இது இந்துக்களின் மத உணர்வை புண்படுத்தி விட்டதாக சர்ச்சை எழுந்தது. போலீசில் புகார், ஷாரூக்கான் உருவபொம்மை எரிப்பு, தியேட்டர்களில் வைக்கப்பட்டு இருந்த பதான் பட பேனர்கள் கிழிப்பு என தொடர்ந்து நடைபெற்ற சம்பவங்கள் பாலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


எதிர்ப்புகளை தொடர்ந்து பதான் படம் மறுதணிக்கை செய்யப்பட்டு சர்ச்சையான காட்சிகள் நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பல மாநிலங்களில் இந்த படத்தை வெளியிட எதிர்ப்பு தெரிவித்து பலரும் போராட்டம் நடத்த நிலையில், படம் வசூலில் சக்கைப்போடு போடுகிறது. 






வசூல் மன்னன் ஷாருக்கான்


ஒட்டுமொத்த பாலிவுட் சினிமாவும் கடந்த 2 ஆண்டுகளாக  கடும் நஷ்டத்தை சந்தித்தது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியது ஒருபக்கம் என்றாலும், படத்தை பற்றி ஓவர் பில்ட்-அப் ஏற்படுத்தி ஏமாற்றியதால் ரசிகர்கள் கடுப்பாகி பாய்காட்(boycott) கலாச்சாரத்தை உண்டாக்கினர். இதனால் படத்தின் வசூல் கடுமையாக பாதிக்கப்பட்டது. 


இந்நிலையில் பதான் படம் ஷாருக்கானுக்கு சிறப்பான கம் பேக் படமாக அமைந்து மூன்றே நாள்களில் உலகம் முழுவதும் 313 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. மேலும் முதல் மூன்று நாள்களில் இதுவரை அதிகம் வசூலித்த இந்தி படம் என்னும் சாதனையையும் புரிந்து கேஜிஎஃப் பட ரெக்கார்டையும் முறியடித்துள்ளது. ஆனால் பதான் படம் சில இடங்களில் நஷ்டத்தை சந்திக்கும் என தகவல் வெளியானதால் படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளது. 


ரசிகர்கள் அட்டகாசம் 


இந்தியாவின் அமராவதி, துலே, மாலேகான், ராய்ப்பூர், பிலாஸ்பூர் மற்றும் நாசிக் ஆகிய இடங்களில் உள்ள தியேட்டர்களில்  பதான் திரைப்படத்துக்கான டிக்கெட் முன்பதிவை தியேட்டர் நிர்வாகம் வேண்டுமென்றே கட்டுப்படுத்தி வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. இங்குள்ள தியேட்டர்களில் பதான் பட பாடலின் போது ரசிகர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்த ஆடுகின்றனர். அப்போது இருக்கைகளும், ஸ்க்ரீன்களும் சேதமடைவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் 30-35% இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டவுடன் டிக்கெட் வழங்குவதை தியேட்டர் நிர்வாகம் நிறுத்தி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.