இயக்குனர் வசந்த், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்டோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய மாரிமுத்து ஒரு இயக்குநராக அவதாரம் எடுத்து கண்ணும் கண்ணும், புலிவால் உள்ளிட்ட படங்களை இயக்கினார். படங்கள் தோல்வியை சந்தித்ததால் நடிப்பில் இறங்கிய மாரிமுத்து மிஷ்கின் இயக்கத்தில் வெளியான 'யுத்தம் செய்' திரைப்படத்தின் மூலம் நடிகர் அவதாரம் எடுத்தார். அதை தொடர்ந்து பல திரைப்படங்களில் குணச்சித்திர நடிகராக யதார்த்தமான நடிப்பை வெளியப்படுத்திய மாரிமுத்து 'பரியேறும் பெருமாள்' திரைப்படத்தில் கதாநாயகியின் அப்பாவாக மக்களின் கவனம் பெற்றார். 


 



வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையில் அடியெடுத்து வைத்த மாரிமுத்துவுக்கு மிகப்பெரிய டர்னிங் பாயிண்டாக அமைந்தது இயக்குநர் திருச்செல்வத்தின் 'எதிர் நீச்சல்' தொடர். ஆணாதிக்கம் நிறைந்த ஒரு கரடு முரடான மனிதராக எப்போதுமே கர்வமாக அனைவரையும் தனக்கு கீழே வைத்திருக்கும் கேரக்டராக ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் வெகு சிறப்பாக நடித்து வந்தார் என சொல்வதை காட்டிலும் வாழ்ந்து வந்தார் மாரிமுத்து என்றே சொல்ல வேண்டும். உச்சகட்ட நடிப்பை வெளிப்படுத்தி எக்கச்சக்கமான ரசிகர்களை கவர்ந்து சீரியலின் டி.ஆர்.பி ரேட்டிங்கை உயர்த்தியதில் முக்கிய பங்கு வகித்தவர் நடிகர் மாரிமுத்து.


கடந்த சில மாதங்களாக புகழின் உச்சாணிக்கொம்பில் மிகவும் ட்ரெண்டிங் பர்சனாக இருந்து வந்தார் மாரிமுத்து. குறிப்பாக சீரியலில் அவர் பேசும் "இந்தாம்மா ஏய்!" அவரின் அடையாளமாகவே மாறியது. இப்படி அவரின் வாழ்க்கையில் வசந்த காலம் ஆரம்பித்த இந்த நேரத்தில் காலம் அவரை வாழவிடாமல் கவ்விக்கொண்டது. எதிர் நீச்சல் தொடருக்கு டப்பிங் பேசிகொண்டு இருந்த சமயத்தில் திடீரென அசௌகரியமாக உணர்ந்ததால் உடனடியாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அவரே சென்றுள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்படும் போது உயிரிழந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் எல்லாம் நடந்து முடிந்துவிட்டது. யாருமே எதிர்பார்க்காத இந்த இழப்பு திரைத்துறையினருக்கும் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. 


 



மாரிமுத்துவின் இந்த எதிர்பாராத மரணத்திற்கு பிறகு அவரின் பிளாஷ் பேக் வீடியோக்கள் சில தற்போது ட்ரெண்டிங்காகி வருகிறது. சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் ஜோதிடர்களுக்கு எதிராக மாரிமுத்து பேசியிருந்தார். அந்த நிகழ்ச்சியில் ஜோதிடர் ஒருவர் மாரிமுத்துவுக்கு இடுப்புக்கு மேலே பிரச்சினை உள்ளது என கூறியுள்ளார். அதற்கு மாரிமுத்து வழக்கமாக நக்கலாக பேசுவது போல இடுப்புக்கு மேலே இதயம் துடித்து கொண்டு இருக்கிறது என கூறியிருந்தார்.


இதை சுற்றி காட்டி இணையவாசிகள் அந்த ஜோதிடர் அன்று சொன்னது உண்மை தானோ? அன்று ஜோதிடத்தை பழித்ததால் தான் அவருக்கு இன்று மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது என இணையத்தில் சில வலைத்தளங்கள் மாரிமுத்துவின் இறப்பு குறித்து விமர்சனம் செய்து வருகிறார்கள். மேலும் ஒருவர் உயிருடன் இல்லாதபோது அவர் பற்றி  இதுபோன்ற வதந்திகளை பரப்பாதீர்கள் எனவும் பலர் கேட்டுக் கொண்டுள்ளனர்.  


இணையத்தில் பரவி வரும் இந்த தகவலுக்கு சம்பந்தப்பட்ட அந்த ஜோதிடர் விளக்கமளித்துள்ளார். நடிகர் மாரிமுத்து தனது கருத்தை தெரிவித்ததில் என்ற ஒரு தவறும் இல்லை. அந்த டாபிக் பற்றி பேசியதால் டென்ஷனாகிவிட்டார். நிகழ்ச்சி முடிந்த பிறகு வந்து மன்னிப்புக் கேட்டு கொண்டார். அவர் இறந்த செய்தி மிகவும் வருத்தத்தை கொடுத்தது என்றுள்ளார் அந்த ஜோதிடர்.