கேரளாவில் பிறந்து தமிழ் சினிமாவில் கதாநாயகியாக வலம் வந்து கலக்கிய நடிகைகளில் ஒருவர் ரேவதி. இவர் தமிழில் 1983ஆம் ஆண்டு மண்வாசனை என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானார். அதன்பின்னர் மலையாளம், தெலுங்கு என பிற மொழிகளிலும் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். நடிப்பு தவிர அவர் ஒரு பரதநாட்டிய நடன கலைஞராகவும் இருந்துள்ளார். 1980 மற்றும் 1990களில் தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களுக்கு கதாநாயகியாக நடித்து அசத்தியுள்ளார். இன்று ரேவதி தனது 54ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்தச் சூழலில் இவருடைய நடிப்பில் வெளியான சிறப்பான பாடல்கள் என்னென்ன?
1. ஓஹோ மேகம் வந்ததோ:
ரேவதி மோகன் நடிப்பில் வெளியான திரைப்படம் மௌனராகம். இந்தப் படத்தில் பாடல்கள் அனைத்தும் நல்ல ஹிட் அடித்திருக்கும். அப்படி ஹிட் அடித்த பாடல்களில் இதுவும் ஒன்று. இந்தப் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருப்பார்.
"கால்கள் எங்கேயும்
ஓடலாம் காதல் இல்லாமல்
வாழலாம் வண்ண மின்னல்களாய்
நின்றாடலாம் வாழ்வில் சங்கீதம்
பாடலாம் நாம் இந்நாளிலே
சிட்டாக மாறலாம்..."
2. சங்கீத மேகம்:
ரேவதி, மோகன் நடிப்பில் வெளியான மற்றொரு சிறப்பான படம் உதயகீதம். இந்தத் திரைப்படத்தில் இப்பாடல் இடம்பெற்று இருக்கும். இந்தப் பாடலை எஸ்பிபி பாடியிருப்பார். இசைஞானி இளையராஜாவின் இசை இந்தப் பாடலுக்கு கூடுதல் வலு சேர்த்து இருக்கும்.
"போகும் பாதை
தூரமே வாழும் காலம்
கொஞ்சமே ஜீவ சுகம்
பெற ராக நதியினில் நீ
நீந்தவா...."
3. பொத்தி வச்ச மல்லிகை மொட்டு:
ரேவதி தமிழில் நடித்த முதல் திரைப்படம் மண்வாசனை. இந்தப் பாடல் இப்படத்தில் அமைந்திருக்கும். இந்தப் பாடலை ஜானகி பாடியிருப்பார். அவருடைய குரலும் இளையராஜாவின் இசையும் சிறப்பானதாக அமைந்திருக்கும்.
"ஆத்துக்குள்ள
நேத்து உன்ன நெனச்சேன்
வெக்க நேரம் போக மஞ்ச
குளிச்சேன் கொஞ்சம் மறஞ்சு
பாா்க்கவா இல்ல முதுகு
தேய்க்கவா அது கூடாது
இது தாங்காது..."
4. இஞ்சி இடுப்பழகி:
கமல்ஹாசன், சிவாஜி, ரேவதி ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் தேவர் மகன். இந்தப் படத்தில் இப்பாடல் இடம்பெற்றுள்ளது. இந்தப் பாடலும் இளையராஜா இசையில் கமல்ஹாசன் மற்றும் ஜானகி குரலில் சிறப்பாக அமைந்திருக்கும்.
"தன்னந் தனிச்சிருக்க
தத்தளிச்சு தான் இருக்க உன்
நினைப்பில் நான் பறிச்சேன்
தாமரையே
புன்னை வனத்தினிலே
பேடைக் குயில் கூவையிலே
உன்னுடைய வேதனைய
நான் அறிஞ்சேன்.."
5. தென்றல் வந்து தீண்டும் போது:
நாசர், ரேவதி நடிப்பில் வெளியான திரைப்படம் அவதாரம். இந்தப் படத்தில் ஜானகி மற்றும் இளையராஜா குரலில் இந்தப் பாடல் இடம்பெற்று இருக்கும். இளையராஜாவின் இசை மற்றும் அவரது குரல் நம்மை உச்சக்கட்ட ஆனந்தத்திற்கு கூட்டி செல்லும் உணர்வை தரும்.
"வந்து வந்து போகுதம்மா
எண்ணமெல்லாம் வண்ணமம்மா
எண்ணங்களுக்கேற்றபடி
வண்ணமெல்லாம் மாறுமம்மா
உண்மையம்மா உள்ளதை
நானும் சொன்னேன்
பொன்னம்மா சின்னக் கண்ணம்மா..."
இவை தவிர மன்றம் வந்த தென்றலுக்கு, நலம் வாழ என்னாளும், சின்ன சின்ன வண்ண குயில் போன்ற பல ஹிட் பாடல்கள் ரேவதியின் நடிப்பில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க:இரவோடு உறவாட வரும் கங்கை அமரனின் வரிகளில் தீரும் நம் வலிகள்!