80'ஸ் - 90 'ஸ் காலகட்டத்தை தன கைவசமாக்கி சுமார் 17 ஆண்டுகால திரைப்பயணத்தில் ஆண்டுக்கு 20 படங்கள் என்ற எணிக்கையில் 450க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து ஆட்டத்தை முடித்துக் கொண்டவர் நடிகை சில்க் ஸ்மிதா (Actress Silk Smitha). குறுகிய கால ஆட்டம் என்றாலும் இன்றும் தென்னிந்திய சினிமா அவரை நினைவு கூறுகிறது என்பது அவருக்கே சொந்தமான தனிச்சிறப்பு. அந்த அழியா நட்சத்திரம் பிறந்த தினமான இன்று அவர் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களைப் பார்க்கலாம்.
* தென்னிந்திய சினிமாவில் ஹீரோயின்களுக்கு நிகரான ஒரு நடிகையாக புகழின் உச்சியில் இருந்த சில்க் ஸ்மிதா, படித்தது நான்காம் வகுப்பு வரையில் மட்டுமே. உறவினர் வீட்டுக்கு வந்த இடத்தில் நடிகர் வினு சக்கரவர்த்தி மூலம் கிடைத்தது முதல் சினிமா வாய்ப்பு.
* தயாரிப்பாளர்கள், கதாநாயகர்கள் என பலரும் சில்க் ஸ்மிதாவிற்காக காத்திருந்த காலங்களும் உண்டு. முதலில் அவரின் கால்ஷீட் கிடைத்த பிறகு தான் தயாரிப்பாளர் ஹீரோயினையே ஒப்பந்தம் செய்வார்களாம்.
* சில்க் ஸ்மிதாவின் கவர்ந்து இழுக்கும் கண்கள், தமிழனுக்கே உரித்தான நிறம், சொக்கவைக்கும் தோற்றமே அவரை புகழின் உச்சிக்கு அழைத்துச் சென்றது.
*தன்னுடைய உடைகளைத் தேர்ந்தெடுப்பது, அதற்கான நகைகளை தேர்வு செய்வது, நடக்கும் ஸ்டைல், உடுத்தும் ஸ்டைல் என அனைத்தையும் அவரே கலைநயத்துடன் தேர்ந்து எடுப்பாராம்.
*அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலம் சிறத குணச்சித்திர நடிகையாக தன்னை வெளிப்படுத்திய சில்க் ஸ்மிதா, 'அன்று பெய்த மழை' படத்தில் நடித்ததன் மூலம் தன்னுடைய பன்முக நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருந்தார்.
* 'வண்டிச்சக்கரம்' என்ற தமிழ் படம் மூலம் அறிமுகமான சில்க் ஸ்மிதாவுக்கு மலையாள படங்களில் நடிக்கவே அதிகம் விருப்பமாம். அதற்கு காரணம் மலையாள திரையுலகில் அவருக்கு நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்கள் வழங்கப்பட்டது தான்.
*சில்க் ஸ்மிதா நடித்த படங்களில் அவருக்காக முழுக்க முழுக்க டப்பிங் பேசியது ஹேமமாலினி தான். அந்த அளவிற்கு இருவரின் குரலுக்கும் ஒற்றுமை இருக்கும்.
* சில்க் ஸ்மிதாவுக்கு மிகவும் பிடித்த நடிகை சாவித்திரி. அவரை போலவே நடிப்பில் சாதிக்க வேண்டும் என ஆசைப்பட்டவர் சில்க் ஸ்மிதா. அவருக்கு நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடிக்க வேண்டும் என்று தான் ஆசைப்பட்டுள்ளார் ஆனால் சினிமா அவரை வெறும் போதை தரும் கவர்ச்சி பொருளாகவே கடைசி வரை பார்த்தது.
* சென்னை வடபழனியில் உள்ள குமரன் காலனியில் தான் சில்க் ஸ்மிதா வசித்து வந்தார். அந்த ஏரியா குழந்தைகளுடன் மிகவும் பாசமாக பழகக் கூடியவர். அத்தனை பெரிய செலிபிரிட்டியாக இருந்த போதிலும் காரை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு நடந்தே மார்க்கெட்டுக்கு சென்று காய்கறிகளை வாங்கும் பழக்கம் கொண்டிருந்தார்.
* 35 வயதிலேயே அவர் தற்கொலை செய்து கொண்டது ஒட்டுமொத்த திரையுலகுக்கும், ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட எமோஷனலாகும் அவரின் குணம் தான் தற்கொலைக்கு காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
* ஆங்கிலம் கற்றுக்கொள்ள வேண்டும் என அலாதியான ஆசை கொண்டு இருந்த சில்க் ஸ்மிதா, அதற்காக ஆங்கிலோ இந்தியன் ஒருவரை ஏற்பாடு செய்து சரளமான ஸ்டைலாக பேச கற்றுக்கொண்டார்.
* அனைத்து தலைமுறை இளைஞர்களின் கனவுக்கன்னியாக கொண்டாடப்பட்ட சில்க் ஸ்மிதா, தமிழ்நாட்டின் மார்லின் மன்றோவாகவே பார்க்கப்பட்டார்.