வாலி, குஷி போன்ற சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை இயக்கிய எஸ்.ஜே. சூர்யா பின்னாளில் நடிகராக அவதாரம் எடுத்து, நடிப்பு ராட்சசன் என்ற அளவிற்கு பெயர் எடுத்துவிட்டார். இந்நிலையில், 10 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் அவர் மீண்டும் இயக்குநராக களமிறங்குகிறார்.
எஸ்.ஜே. சூர்யா இயக்கும் ‘கில்லர்‘ திரைப்படம்
தான் இயக்கும் திரைப்பம் குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தனது கனவுப் படத்துடன் உங்கள் இயக்குநர் எஸ்.ஜே. சூர்யா திரும்பி வந்துவிட்டேன் என்று கூறியிருக்கிறார். அந்த படத்தின் பெயர் ‘KILLER' என்றும், மிகவும் மதிப்பு மிக்க கோகுலம் திரைப்பட நிறுவனத்துடனும் அதன் தயாரிப்பாளர் கோகுலம் கோபாலனுடன் இணைவதில், தான் ஆசிர்வதிக்கப்பட்டவனாக உணர்வதாகவும், மகிழ்ச்சியடைவதாகவும், ரசிகர்களின் அன்பும், ஆதரவும் தேவை என்றும் பதிவிட்டுள்ளார். அதோடு, புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.
எஸ்.ஜே. சூர்யா கடைசியாக கடந்த 2015-ம் ஆண்டு ‘இசை‘ படத்தை இயக்கி, அவரே நாயகனாக நடித்திருந்தார். இந்நிலையில், தற்போது 10 ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் மீண்டும் திரைப்படம் இயக்குவது, ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. அதிலும், திரைப்படத்தின் பெயர் கில்லர் என்று இருப்பதால், அந்த ஆவல் மேலும் அதிகரித்துள்ளது.
ஏனென்றால், சமீப காலங்களாக அவர் வில்லன் அவதாரம் எடுத்து, நடிப்பில் மிரட்டி வருகிறார். இந்த சூழலில், கில்லர் என்ற அவருடைய படத்திற்கு அவர் எந்த அளவிற்கு மெனக்கெடுவார் என்பதே ரசிகர்களின் ஆர்வத்திற்கு காரணமாக இருக்கிறது.
‘கில்லர்‘ படத்தின் ஹீரோ யார்.?
தென்னிந்திய திரைப்படத்துறையின் சிறந்த நடிகர்களில் ஒருவராக எஸ்.ஜே. சூர்யா திகழும்போது, அவர் எதற்காக வேறு ஹீரோவை தேட வேண்டும்.? ஆம், ‘கில்லர்‘ திரைப்படத்தின் ஹீரோ அவரே தான்.
சமீப காலங்களாக தொடர்ந்து வெற்றிப் படங்களில் நடித்து, மிகவும் பிசியான நடிகராக அவர் வலம் வரும் நிலையில், தற்போது, பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்து ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி‘ படத்திலும், கார்த்தியுடன் இணைந்து ‘சர்தார் 2‘ திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
“கனவு திரைப்படம்“
சமீப காலமாக எஸ்.ஜே. சூர்யா அளித்த நேர்காணல்களில், தன்னிடம் கில்லர் என்ற கதை இருப்பதாகவும், அது தான் அவரது கனவு திரைப்படம் எனவும், அதை நிச்சயம் இயக்குவேன் எனவும் கூறி வந்தார்.
இந்த நிலையில், நடிப்பு ஜாம்பவானான அவருக்கு, தயாரிப்பு ஜாம்பவானான கோகுலம் கோபாலனே தயாரிப்பாளராக கிடைத்துள்ளார். அப்படியானால், இந்த திரைப்படம் எப்படி இருக்கும் என நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்.!!
இந்த திரைப்பம், PAN இந்தியா திரைப்படமாக, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.