2025ஆம் ஆண்டுக்கான பொறியியல் கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியலை, அமைச்சர் கோ.வி.செழியன் இன்று (ஜூன் 27) வெளியிட்டார். கிண்டியில் உள்ள தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் பட்டியல் வெளியிடப்பட்டது.
இதில் 200-க்கு 200 மதிப்பெண்களைப் பெற்ற 145 பேரில் 140 பேர், தமிழ்நாடு தேர்வு வாரியத்தின்கீழ் படித்தவர்கள் ஆவர். மீதமுள்ள ஐவரும் பிற கல்வி வாரியங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
முதலிடம் பிடித்த மாணவர்கள் யார் யார்?
காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி சஹஸ்ரா மாநில அளவிலான தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திகா 2ஆம் இடம் பெற்றுள்ளார். அதேபோல, அமலன் ஆண்டோ என்னும் அரியலூர் மாணவர் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார். இவர்கள் அனைவரும் 200-க்கு 200 மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். முதல் 10 இடங்களில், 7 இடங்களை மாணவிகளே பெற்றுள்ளனர். 3 பேர் மாணவர்கள் ஆவர்.
அரசுப் பள்ளிகளில் முதலிடம் பெற்றவர்கள் யார் யார்?
அதேபோல, அரசுப் பள்ளி 7.5 இட ஒதுக்கீட்டின்கீழ் கடலூரைச் சேர்ந்த தரணி என்னும் மாணவி முதலிடம் பிடித்துள்ளார். இவரும் 200-க்கு 200 மதிப்பெண்களையே பெற்றுள்ளார். இவர் கந்தமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்தவர் ஆவார்.
அதேபோல, மைதிலி எனும் அனகாபுத்தூர், சென்னை மாணவி 2ஆம் இடத்தைப் பெற்றுள்ளார். மூன்றாம் இடத்தில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முரளிதரன் என்னும் மாணவர் பெற்றுள்ளார். இவர் பண்ருட்டி அரசு மாதிரிப் பள்ளியைச் சேர்ந்தவர் ஆவார். இவர்கள் இருவருமே 200-க்கு 200 கட் ஆஃப் மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.
தரவரிசைப் பட்டியலைக் காண்பது எப்படி?
மாணவர்கள் https://static.tneaonline.org/docs/ACADEMIC_GENERAL_RANK_LIST_2025.pdf?t=1750999997778 என்ற இணைப்பை க்ளிக் செய்து, தரவரிசைப் பட்டியலைக் காணலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல https://www.tneaonline.org/ என்ற இணைப்பை க்ளிக் செய்து, அகாடமிக் மற்றும் தொழிற்பிரிவு, இட ஒதுக்கீட்டுப் பிரிவு மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியலை தனித்தனியாகக் காணலாம்.