Sivakarthikeyan Madharaasi: சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான மதராஸி திரைப்படம், ஒட்டுமொத்தமாக ரூ.100 கோடியை கூட வசூலிக்கவில்லை என தரவுகள் தெரிவிக்கின்றன.
எதிபார்ப்புகளை தவிடுபொடியாக்கிய ”மதராஸி”
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம், அவரது திரைப்பயணத்தில் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. 300 கோடிக்கும் அதிகமாக வசூலித்து, அந்த ஆண்டின் அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாகவும் திகழ்ந்தது. தேசிய அளவில் சிவகார்த்திகேயனும் பிரபலமடைந்தார். இந்நிலையில் தான், ஏ.ஆர். முருகதாஸ் உடன் இணைந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான மதராஸி திரைப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. அதன்படி, கடந்த செப்டம்பர் மாதம் வெளியான திரைப்படம், முதல் சில நாட்களுக்கு ஆஹா ஓஹோ என சமூக வலைதளங்களில் பாராட்டப்பட்டது. ஆனால், அடுத்த சில தினங்களிலேயே படம் வந்த சுவடே இல்லாமல் போய்விட்டது.
கடும் விமர்சனங்கள்:
ஆக்ஷன் த்ரில்லராக வெளியான திரைப்படம், ஆரம்பம் முதலே கலவையான விமர்சனங்களையே பெற்றது. நடிகர்கள் சிறப்பாக செயல்பட்டதோடு, ஆங்காங்கே சில பொழுதுபோக்கு அம்சங்களும் இருந்தன. ஆனால், மோசமான திரைக்கதை அதைவிட மோசமாக அதனை திரையில் காட்டியது ஆகியவை ஏமாற்றத்தை அளித்தது. விமர்சகர்கள் மட்டுமின்றி, பார்வையாளர்கள் கூட படத்தை கடுமையாக சாடினர். அதேநேரம், இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் திரையுலகில் தனது இருப்பை தக்கவைத்துக் கொள்ள, பல லட்சங்களை கொட்டி படத்தை பாராட்டும்படி தனக்காக தனியாக விளம்பர நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
ரூ.100 கோடியை கூட தொடாத மதராஸி
இந்த சூழலில் தான், மதராஸி திரைப்படம் ஒடிடி தளத்தில் வெளியாகி, தனது திரையரங்க பயணத்தை முடித்துள்ளது. அதன் முடிவில் திரையரங்குகள் மூலம் மொத்தமாக ரூ.100 கோடியை கூட இந்த படம் தொடவில்லை என்ற தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதல் நாளில் இந்த படம் 13.65 கோடி ரூபாயை வசூலித்தது. ஆனால், அடுத்தடுத்த நாட்களில் எதிர்பார்த்ததை காட்டிலும், வேகமாக வசூல் சரிய தொடங்கியது. அதன்படி, இந்தியாவில் ஒட்டுமொத்தமாக இந்த படம் சுமார் ரூ.62.82 கோடி வசூலித்துள்ளதாகவும், ஜிஎஸ்டியுடன் சேர்த்தால் சுமார் ரூ.74.12 கோடி ரூபாயும் வசூலித்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வெளிநாடுகளில் சுமார் 25 கோடியை வசூலித்ததன் மூலம், படத்தின் ஒட்டுமொத்த பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்ஷனே சுமார் ரூ.99.12 கோடி தான் என கணக்கிடப்பட்டுள்ளது.
ரூ. 100 கோடி நஷ்டம்
திரைத்துறையில் வெளியாகியுள்ள தகவல்களின்படி, மதராஸி திரைப்படம் சுமார் 180 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. வட்டிக் கணக்கை சேர்த்தால் அது ரூ.200 கோடியை எட்டும். அமரன் படத்தின் வெற்றியை நம்பியே, சிவகார்த்திகேயனை நம்பி தயாரிப்பு நிறுவனம் இந்த பெரும் தொகையை செலவிட்டதாக கூறப்படுகிறது. ஆடியோ ரைட்ஸ், ஒடிடி மற்றும் டப்பிங் ரைட்ஸ் ஆகியவற்றின் மூலம், தயாரிப்பு நிறுவனத்திற்கு ஓரளவிற்கு போட்டதை படம் திருப்பிக் கொடுத்து இருக்கலாம். ஆனால், ஒட்டுமொத்தமாக இது லாபம் இல்லாத மிகப்பெரிய தோல்வி படமாகவே அமைந்துள்ளது. குறிப்பாக படத்தை வாங்கி வெளியிட்ட விநியோகஸ்தர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
அமரன் போல் ஓடாதது ஏன்?
அமரன் திரைப்படம் தேசத்திற்காக தியாகம் செய்த ராணுவ வீரரின் கதை என்பதால், இயல்பாகவே பேன் இந்தியா படமாக அமைந்தது. அதோடு, தயாரிப்பாளர் கமல்ஹாசன் படத்தை நாட்டின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு சேர்க்க தேவையான, அனைத்து விளம்பர யுக்திகளையும் திறம்பட பயன்படுத்தினார். திரைக்கதையும் வலுவானதாகவும், நம்பும்படியாகவும் இருந்தது. ஆங்காங்கே கமர்ஷியல் எலிமெண்ட்களும் சரியாக அமைந்திருந்தன. அதனுடன் ஒப்பிடுகையில் மதராஸி என்பது ஒரு சுமாரான படமாகவே அமைந்தது, படத்தின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. மேலும், மதராஸி ஒரு தமிழ் படமாக மட்டுமே அமைந்துவிட்டதால், தேசிய அளவில் பெரிய கவனத்தையும் ஈர்க்கவில்லை. சல்மான் கான் பற்றிய ஏ.ஆர். முருகதாஸின் பேச்சும், இந்தி பெல்ட்டில் மதராஸி படத்திற்கு பாதகமாக அமைந்தது.