சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி கோலிவுட்டில் மாபெரும் ஹிட்டான ’சிவாஜி: த பாஸ்’ படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், படம் குறித்து படக்குழுவினர், ரசிகர்கள், பிரபலங்கள் எனப் பலரும் நினைவுகூர்ந்து பாராட்டி வருகின்றனர்.
சிவகார்த்திகேயன் ட்வீட்
அந்த வகையில் தீவிர ரஜினி ரசிகரான நடிகர் சிவகார்த்திகேயன், சிவாஜி படம் குறித்து ட்வீட் செய்து மகிழ்ந்துள்ளார்.
”சிவாஜி படத்தை நான் மொத்தம் 15 முறை தியேட்டர்களில் பார்த்தேன். தலைவர் ரஜினியின் ஸ்டைல், ஸ்வேக், மாஸ் என அது ஒரு அற்புதமான திரையரங்க அனுபவம்.இத்தகைய மறக்க முடியாத படத்தை எடுத்த இயக்குநர் சங்கர், ஏவிஎம் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் ஆகியோருக்கு நன்றி” என ட்வீட் செய்துள்ளார்.
மாபெரும் வெற்றிப்படம்
கடந்த 2007ஆம் ஆண்டு, ஜூன் 15 அன்று வெளியான `சிவாஜி: த பாஸ்’ திரைப்படம் மக்களின் பெரு வரவேற்பைப் பெற்றதுடன், வணிகரீதியாக பெரும் வெற்றியும் பெற்றது. பிரம்மாண்ட இயக்குநர் எனப் பெயர் எடுத்த சங்கர், தமிழின் டாப் நடிகராக இருந்த ரஜினிகாந்த் ஆகிய இருவரும் முதன்முறையாக இப்படத்தில் இணைந்ததால் தயாரிப்பின்போதே இந்தத் திரைப்படம் பெரிதும் எதிர்பார்ப்புகளுடன் தொடங்கப்பட்டது.
அமெரிக்காவில் இருந்து மென்பொருள் உருவாக்கத்தின் மூலமாக பணம் ஈட்டிய எஞ்சினீயர் ஒருவர் மீண்டும் இந்தியாவுக்குத் திரும்பி, இலவசமாக கல்வி, மருத்துவம் ஆகியவற்றை மக்களுக்கு வழங்க நினைக்கிறார். ஆனால், அவரை ஊழல்வாதிகளான அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் தடுக்க நினைக்க, அதனை அவர் எப்படி எதிர்க்கிறார், அவரது கனவு நிறைவேறியதா என்பதை பிரமாண்டமாகவும், சுவாரஸ்யமாகவும் பேசியிருந்தது `சிவாஜி: த பாஸ்’ திரைப்படம்.
படக்குழுவினர்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் `சிவாஜி’ என்று தனது சொந்தப் பெயரில் முதன்மைக் கதாபாத்திரமாக நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் விவேக், ஷ்ரேயா சரண், சுமன், ரகுவரன், மணிவண்ணன், வடிவுக்கரசி முதலான நடிகர்கள் நடித்திருந்தனர். மேலும், இதில் ஒரு பாடலில் நடனம் ஆடியுள்ளார் நடிகை நயன்தாரா. இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். மேலும், இதன் சண்டைக் காட்சிகளை பீட்டர் ஹெயின் உருவாக்கியிருந்தார். ஒளிப்பதிவாளராக கே.வி.ஆனந்த், கலை இயக்குநராக தோட்டா தரணி ஆகியோர் பணியாற்றியிருந்தனர்.
கலக்கிய மொட்ட பாஸ்...
2007ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களிலேயே மிகப்பெரிய வெற்றியைப் பெற்று, `பிளாக்பஸ்டர்’ என அறிவிக்கப்பட்ட திரைப்படம், `சிவாஜி: தி பாஸ்’. ஊழல், கறுப்புப் பணம் ஆகியவற்றைப் பற்றி பேசிய இந்தத் திரைப்படம், பணமதிப்புநீக்கம் மூலமாக அதனை சரிசெய்ய முடியும் எனக் கூறியிருந்தது.
கடந்த 2007ஆம் ஆண்டுலேயே, இந்தியாவில் 1000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்பட வேண்டும் என்ற ஐடியா இந்தப் படத்தில் கூறப்பட்டிருந்தது. அதனைக் கடந்த 2016ஆம் ஆண்டு மோடி அரசு இந்தியாவில் அமல்படுத்தியது. எனினும், கறுப்புப் பணம் மீட்கப்படவில்லை எனப் பின்னர் மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தின் பாடல்களும், அதன் காட்சியமைப்புகளும் இன்றும் கொண்டாடப்படுகின்றன. மேலும், இந்தத் திரைப்படத்திற்காக முதன்முதலான மொட்டையடித்து `மொட்ட பாஸ்’ கெட்டப்பில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.