நடிகர்கள் சிவகார்த்திகேயன், வினய் , யோகி பாபு நடித்து கோலமாவு கோகிலா இயக்குநர் நெல்சனின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் டாக்டர் திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.படம் வருகின்ற 9 அக்டோபர் அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.







சிவகார்த்திகேயன் தனது SK புரொடக்‌ஷன் நிறுவனம் சார்பில் இந்த படத்தை அதிக பொருட்செலவில் தயாரித்து உள்ளது. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க யோகி பாபு, வினய் உள்ளிட்டோர் படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து இருக்கின்றனர். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே நடந்து முடிந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்து இருந்தனர். ஆனால் கொரோனோ தொற்று காரணமாகத் திரையரங்குகள் மூடப்பட்டிருந்ததால் திரைப்படம் ரிலீஸாகவில்லை. இதனையடுத்து டாக்டர் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியிடப் படக்குழுவினர் திட்டமிட்டிருப்பதாகக் கடந்த சில மாதங்களாக சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வந்தது. ஆனால் இது குறித்த எந்த அறிவிப்பையும் சிவகார்த்திகேயன் உறுதி செய்யவில்லை. இந்நிலையில் டாக்டர் திரைப்படம் நிச்சியமாகத் திரையரங்குகளில் தான் வெளியாகும் என படத்தில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், "டாக்டர் திரைப்படம் உருவான நாள் முதல் இந்த திரைப்படம் திரையரங்கில் தான் வெளியாக வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன். இது போன்ற ஒரு காமெடி திரைப்படம், திரையரங்கில் ரசிகர்களுக்கு மிகச்சிறந்த அனுபவத்தைக் கொடுக்கும். ஆனால் எதிர்பாராத விதமாக கோவிட்-19 காரணமாக வெளியீட்டுத் தேதி மாற்றப்பட்டுள்ளது. டாக்டர் படம் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராக இருந்ததால், அந்த காலகட்டத்தில் பல்வேறு ஓடிடி தளங்கள் எங்களிடம் பேச்சுவார்த்தைகள் நடத்தியது.


ஆனால் அப்போதும் டாக்டர் திரைப்படத்தை திரையரங்கில் தான்   வெளியிட முடிவு செய்தோம்.  தற்போது மீண்டும் அனைத்தும் இயல்பு  நிலைக்கு திரும்பியதில்  டாக்டர் திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிட உள்ளோம்.  டாக்டர் திரைப்படம் ரசிகர்களுக்கு மிகவும் வித்தியாசமான ஒரு அனுபவத்தை ரசிகர்களுக்குக் கொடுக்கும். 


 



சிவகார்த்திகேயன், இயக்குநர் நெல்சன் திலீப்குமார், அனிருத் கூட்டணி  ரசிகர்களுக்கு 100 சதவீதம் விருந்தளிக்கும். டாக்டர் திரைப் படத்தை ரசிகர்களுடன் இணைந்து நாங்களும் திரையரங்குகளில் காண மிகவும் ஆவலோடு இருக்கிறோம்" எனக் கூறியுள்ளார்.


 


மேலும் டாக்டர் திரைப்படம் அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது.