ஐஏஎஸ் என்ற இந்திய ஆட்சிப் பணி உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான அதிகாரிகளை தேர்வு செய்வதற்காக கடந்தாண்டு தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு முடிகளை யுபிஎஸ்சி எனப்படும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டில் இருந்து பலர் தேர்வாகி உள்ள நிலையில், கோவையை சேர்ந்த மாற்றுத் திறனாளி இளைஞர் ஒருவர் தேர்வாகி அசத்தியுள்ளார்.


கோவை பீளமேடு பகுதியை சேர்ந்தவர்கள் தர்மலிங்கம் -  அமிர்தவள்ளி தம்பதியினர். இவர்களது இரண்டாவது மகன் ரஞ்சித். பிறவியிலேயே செவித் திறன் குறைபாடு உடைய ரஞ்சித், காது கேளாதோருக்கான சிறப்பு பள்ளியில் படித்தார். 12 ம் வகுப்பில் காது கேளாதோருக்கான பிரிவில் ரஞ்சித் மாநில அளவில் முதலிடம் பிடித்து அசத்தினார். இதனையடுத்து 2016 ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா நேரில் அழைத்து பாராட்டிய நிலையில், பின்னர் மெக்கானிக்கல் இஞ்சினியரிங் படித்தார்.  இதனை தொடர்ந்து யுபிஎஸ்சி தேர்வு எழுதிய நிலையில், இந்திய அளவில் 750 இடத்தை ரஞ்சித் பெற்றுள்ளார்.


இது குறித்து ரஞ்சித் கூறுகையில், “யுபிஎஸ்சி தேர்வினை தமிழில் எழுதினேன். மொழி தனக்கு  எங்கும் ஒரு தடையாக இல்லை. பி.எஸ்.ஜி கல்லூரியில் மெக்கானிக்கல் இஞ்சினியரிங் படித்த போது,  காம்பஸ் இன்டர்வியூவில் செவி திறன் குறைபாட்டை காரணம் காட்டி வேலைக்கு எடுக்காமல் நிராகரித்தனர். என்னுடைய திறமையை காட்ட முடியும் என கூறியும், நிராகரித்தால் எப்படியும் என்னால் சாதிக்க  முடியும் என்பதை நிரூபிக்க தொடர்ந்து முயன்றேன். தொடர் முயற்சியால் தற்போது யுபிஎஸ்சி தேர்வில்  வெற்றி பெற்று உள்ளேன். பொது மக்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையிலான இடைவெளியை குறைவாக்க வேண்டும் என்பதே தனது விருப்பம். மாற்று திறனாளிகளின் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுப்பேன். மாற்று திறனாளிகள் தங்களுக்கு என தனியாக உலகத்தை சுருக்கி கொள்ள கூடாது.  தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் நிச்சயம் வெற்றி பெற முடியும். ஏழை எளியோருக்கும் மாற்று திறனாளுக்கும் பயனளிக்கும் வகையில் தனது செயல்பாடுகள் இருக்கும்” என அவர் தெரிவித்தார்.


 



ரஞ்சித் பெற்றோர்


இது குறித்து ரஞ்சித்தின் தாயார் அமிர்தவள்ளி கூறும் போது, ”முதலில் குரூப் 1 தேர்வு எழுதிய போது, அதில்  காது கேளாதோருக்கு ஒதுக்கீடு இல்லை என ரஞ்சித் நிராகரிக்கப்பட்டார். அதன் பின்பு இரண்டு வருடமாக தேர்வுக்கு தயாராகி தற்போது வெற்றி பெற்றுள்ளார்.  ரஞ்சித் சாதிக்க வேண்டும் என்ற ஒரே சிந்தனையில் முயற்சி செய்து, யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது” என அவர் தெரிவித்தார். 



 மன்னார்குடியை  R.K.சபரிநாதன் நடத்தும் சந்தோஷ் & சபரி பயிற்சி மையத்தில் படித்த ரஞ்சித், தமிழை விருப்பப் பாடமாக மட்டுமல்லாமல் தேர்வையே தமிழில் எழுதி முதல் முயற்ச்சியிலேயே தேர்ச்சி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



குடிமைப் பணிகள் தேர்வில் வெற்றி பெற்றுள்ள ரஞ்சித்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.




தன்னுடைய குறைபாட்டை பொருட்டாக கொள்ளாமல், திறமை மீது நம்பிக்கை வைத்து வெற்றி பெற்றுள்ள ரஞ்சித், மாற்றுத் திறனாளிகளுக்கு மட்டுமல்ல, மற்ற அனைவருக்குமே ஒரு உதாரணம்