இந்த ஆண்டில் பெரும் எதிர்பார்க்கப்பட்ட சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் அதர்வா , ரவி மோகன் ஸ்ரீலீலா ஆகியோர் நடித்துள்ளார்கள். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். பராசக்தி படத்தின் சிறப்பு காட்சிகள் அதிகாலை 6 மணிக்கு தொடங்கி தற்போது விமர்சனங்கள் வெளிவர துவங்கியுள்ளன. படம் பார்த்த ரசிகர்கள் பெரும்பாலும் படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்களை வழங்கியுள்ளார்கள்.
பராசக்தி ரசிகர்கள் விமர்சனம்
1960 களில் தமிழ்நாட்டில் இந்தி மொழி திணிப்பிற்கு எதிராக எழுந்த மாணவர் கிளர்ச்சியே படத்தின் மைய கதை. இந்த பின்னணியில் குடும்ப ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் காமெடி , செண்டிமெண்ட் , ரொமான்ஸ் மற்றும் அரசியல் என திரைக்கதையை உருவாக்கியுள்ளார் இயக்குநர்
பராசக்தி பாசிட்டிவ்ஸ்
துவக்கம் முதலே மைய கதையான இந்தி மொழி பிரச்சனைக்குள் சென்றுவிடுகிறது படம். 1960 களின் செட் அமைப்புகள் தத்ரூபமால உருவாக்கப்பட்டுள்ளன. இந்தி மொழி குறித்த வசனங்கள் படத்தில் கவனமீர்க்கின்றன. இயக்குநர் நடிகர்களிடம் நடிப்பை வாங்கியிருக்கும் விதம் பாராட்டுக்களை பெறுகிறது. ஜிவி பிரகாஷ் பின்னணி இசை சிறப்பு. பராசக்தி படம் பேசும் அரசியல் பிரச்சனை இன்றைய சூழலில் மிக அவசியமானது என்பதால் மையக்கதை முக்கியத்துவம் பெறுகிறது. இடைவேளை காட்சி தனித்து நிற்கிறது.
நெகட்டிவ்ஸ்
அரசியல் ரீதியாக படத்தின் கதை ஸ்ட்ராங் என்றாலும் திரைக்கதையில் கோட்டை விட்டிருக்கிறார் இயக்குநர். வளவளவென்று நீளும் காட்சிகள், தேவைக்கதிகமான ரொமான்ஸ் படத்தின் சீரான ஓட்டத்திற்கு தடையாக அமைகின்றன என படம் பார்த்த பெரும்பாலான ரசிகர்களின் கருத்தாக உள்ளது. அந்த வகையில் படம் உருவாக்கிய எயிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியிருக்கிறது. கடந்த ஆண்டுதான் தமிழ் சினிமாவிற்கு ஒரு ஏமாற்றமான ஆண்டாக அமைந்தது என்றால் இந்த ஆண்டும் அதே நிலை தொடருமோ என படம் பார்த்த ரசிகர்கள் வருத்தம் தெரிவித்துள்ளார்கள்.