நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த மே 13ஆம் தேதி டான் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியானது.
இயக்குநர் அட்லியின் உதவி இயக்குனரான சிபி சக்கரவர்த்தி இயக்கிய இப்படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார். சிவகார்த்திகேயன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, பிரியங்கா மோகன் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
குடும்பங்கள் கொண்டாடும் படமாகவும், வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்படியும், அப்பா - மகன் செண்டிமெண்ட் உடனும் இப்படம் திரையரங்குகளை ஆக்கிரமித்த நிலையில், 100 கோடி வசூலை வாரிக்குவித்து சிவகார்த்திகேயனுக்கு பிளாக்பஸ்டர் படமாக இப்படம் அமைந்தது.
இந்நிலையில், இப்படத்தை தயாரித்த சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன்ஸ் இணை தயாரிப்பாளர் முன்னதாக தான், சிவகார்த்திகேயன், இசையமைப்பாளார் அனிருத், இயக்குநர் சிபி சக்கரவர்த்தி ஆகியோருடன் இருக்கும் புகைப்படத்தை தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மேலும், இப்படம் தாங்கள் என்றும் நினைவுகூரத்தக்க படம் என்றும், டான் படத்தின் பின்னால் இருக்கும் டான்கள் எனவும் குறிப்பிட்டு இப்புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
முன்னதாக இப்படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி வரவேற்ப்பு பெற்று வரும் நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று இப்படம் அனைவரும் கண்டுகளிக்க வேண்டிய படம் எனப் பாராட்டி ட்வீட் செய்திருந்தார்.
இந்நிலையில், இயக்குநர் நெல்சன் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ வெற்றியைத் தொடர்ந்து விஜயை இயக்கியதுபோல், டான் வெற்றியை அடுத்து சிபி சக்கரவர்த்தியும் விஜயை வைத்து படம் இயக்க உள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.