பொங்கல் பண்டிகையின் போது 10 படங்கள் வெளியாகிவந்த சூழல் மாறி இரண்டு படங்கள் வெளியாகும் சூழல் உருவாகியுள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கலுக்கு ஜனநாயகன் மற்றும் பராசக்தி ஆகிய இரு படங்கள் திரைக்கு வர இருக்கின்றன. விஜயின் கடைசி படத்துடன் சிவகார்த்திகேயனின் 25 ஆவது படம் வெளியாக இருப்பது ரசிகர்களிடையே பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது
ஜனநாயகன் vs பராசக்தி
விஜயின் கடைசி படமாக உருவாகியுள்ள ஜனநாயகன் வரும் ஜனவரி 9 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. எச் வினோத் இப்படத்தை இயக்கியுள்ளார் . அதே நேரம் ஜனவரி 14 ஆம் தேதி வெளியாக இருந்த சிவகார்த்திகேயனின் பராசக்தி ஜனவரி 10 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. டான் பிக்ச்சர்ஸ் தயாரிக்க சுதா கொங்காரா இப்படத்தை இயக்கியுள்ளார். இரு படங்களுமே அரசியல் கதைக்களங்களை மையமாக கொண்டிருப்பது கூடுதல் தகவல். குறிப்பாக பராசக்தி திரைப்படம் இந்தி திணிப்பிற்கு எதிராக தமிழ்நாட்டில் நடந்த மாணவர் புரட்சியை மையமாக வைத்து உருவாகியுள்ளது.
பராசக்தி திரைப்படம் ரிலீஸ் மாற்றப்பட்டதில் இருந்து விஜய் ரசிகர்கள் மற்றும் சிவகார்த்திகேயன் ரசிகர்களிடையே சமூக வலைதளத்தில் தொடர் கருத்து மோதல் நடந்து வருகிறது. பொங்கலுக்கு கிட்டதட்ட 10 நாட்கள் விடுமுறை இருப்பதால் பராசக்தி படத்தை முன்பே வெளியிட விநியோகஸ்தர்கள் கோரிக்கை வைத்ததால் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டதாக தயாரிப்பாளர் சார்பாக தெரிவிக்கப்பட்டது. ரிலீஸ் தேதி மாற்றப்பட்டதில் சிவகார்த்திகேயனுக்கு எந்த பங்கும் இல்லை என்றாலும் ஆனால் இதேபோல் ரஜினி படம் வெளியானபோது சிவகார்த்திகேயன் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டதை ரசிகர்கள் சுட்டிகாட்டி உள்ளார்கள்
ரஜினிக்காக ரிலீஸ் தேதியை மாற்றிய சிவகார்த்திகேயன்
2023 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் திரைப்படம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியாக இருந்தது. ரஜினியின் ஜெயிலர் படத்தின் ரிலீஸ் தேதி ஆகஸ்ட் 10 என அறிவிப்பு வெளியானதும். இதனால் மாவீரன் படத்தின் ரிலீஸ் தேதி ஜூலை மாதத்திற்கு மாற்றப்பட்டது. சிவகார்த்திகேயன் ஒரு தீவிர ரஜினி ரசிகர் என்பது அனைவரும் அறிந்த தகவலே. ரஜினி படத்துடன் தன் படம் போட்டியிடுவதை தவிர்க்க உடனே தன் படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றிய எஸ்.கே ஜனநாயகன் பராசக்தி விஷயத்தில் மட்டும் அமைதியாக இருப்பது ஏன் ? என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.