ஜன நாயகன்
எச் வினோத் இயக்கத்தில் விஜய் தற்போது ஜன நாயகன் படத்தில் நடித்து வருகிறார். பூஜா ஹெக்டே , மமிதா பைஜூ , பாபி தியோல் ,கெளதம் மேனன் , பிரியாமனி உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். அனிருத் இசையமைக்கிறர். கே.வி. என் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்திற்கு விஜய் 270 கோடி வரை சம்பளமாக பெற்றுள்ளதாகவும் 300 கோடியில் பட்ஜெட்டில் படம் எடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஜன நாயகன் படத்தின் ரிலீஸ் தேதியை சமீபத்தில் படக்குழு வெளியிட்டது. அடுத்த ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதி பொங்கலை முன்னிட்டு ஜன நாயகன் படம் வெளியாக இருக்கிறது. 2026 பொங்கலைக் கொண்டாட விஜய் ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கிறார்கள். இந்நிலையில் ஜன நாயகன் படத்துடன் சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வரும் பராசக்தி படமும் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜன நாயகன் படத்துடன் வெளியாகிறதா பராசக்தி
சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் பராசக்தி. சூர்யா முன்பு நடிக்க இருந்து பின் சிவகார்த்திகேயனின் 25 ஆவது படமாக இப்படம் முடிவானது. ரவி மோகன் , அதர்வா , ஶ்ரீலீலா உள்ளிட்டோர் இப்படத்தில் நடிக்கிறார்கள். ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். டான் பிக்ச்சர்ஸ் சார்பாக ஆகாஷ் பாஸ்கரன் இப்படத்தை தயாரிக்கிறார். பராசக்தி படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காரைக்குடியில் நடைபெற்று முடிந்தது. தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இலங்கையில் நடைபெற்று வருகிறது.
இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து உருவாகி வருகிறது பராசக்தி. ஏற்கனவே இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் பெரியளவில் எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. தற்போது 2026 ஆம் ஆண்டு பொங்கலுக்கு ஜன நாயகன் படத்துடன் பராசக்தி திரைப்படம் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் ரசிகர்களிடையில் சமூக வலைதளத்தில் கருதுத் மோதல் தொடங்கியுள்ளது