சிவகார்த்திகேயன்

விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக தனது கரியரைத் தொடங்கி இன்று முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். எளிய குடும்ப பின்னணியில் இருந்து சினிமாவில் வந்து சாதிக்கும் கணவுடன் இருக்கும் பலருக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷனாக எஸ்.கே இருக்கிறார். 

அமரன் படத்தின் ப்ளாக்பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்துள்ளார் சிவகார்த்திகேயன். அடுத்தடுத்து ஆக்‌ஷன் த்ரில்லர் , பீரியட் டிராமா என அவருக்கு படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. தற்போது ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் எஸ்.கே 23 படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு பணிகள் மீதமிருக்கின்றன. 

பராசக்தி

சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. கடந்த வாரம் வெளியான டைட்டில் டீசர் ரசிகர்களிடம் பெரியளவில் வரவேற்பைப் பெற்றது. ஜெயம் ரவி , அதர்வா , ஶ்ரீலீலா உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்து வரும் நிலையில் ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். டான் பிக்ச்சர்ஸ் சார்பாக ஆகாஷ் பாஸ்கரன் படத்தை தயாரிக்கிறார். 

சிவகார்த்திகேயனை இயக்கும் குட் நைட் இயக்குநர்

பராசக்தி படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்தை விநாயக் சந்திரசேகரன் இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2023 ஆம் ஆண்டு மணிகண்டன் நடித்த குட் நைட் படத்தில் இயக்குநராக அறிமுகமானார் இவர். பேஷன் ஸ்டுடியோஸ் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.