தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகரும், தேமுதிக கட்சியின் தலைவருமான கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு ஏராளமான நட்சத்திரங்கள், திரை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், ரசிகர்கள் என பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
விஜயகாந்த் இறுதி அஞ்சலி நடக்கும் சமயத்தில் வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்த நடிகர்கள் பலரும் சென்னை திரும்பிய பிறகு ஒருவரின் பின் ஒருவராக விஜயகாந்த் நினைவிடத்தில் மற்றும் அவரின் இல்லத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் :
அந்த வகையில் தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், விஜயகாந்த் நினைவிடத்தில் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது பத்திரிகையாளர்களிடம் பேசிய கார்த்திக் சுப்புராஜ் "நான் ஷார்ட் பிலிம் எடுத்த சமயத்தில் என்னுடைய படம் ஒன்றை நான் கேப்டன் டிவியின் போட்டி ஒன்றுக்கு அனுப்பி வைத்து இருந்தேன். அப்போது தான் அவரை நான் ஒரு முறை நேரில் சந்தித்துள்ளேன். அவர் எல்லா கதையை பற்றியும் ரிவியூ சொல்லிக்கொண்டு இருக்கும் போது என்னுடைய கதையை படித்து பார்த்து விட்டு இதை யார் எழுதியது என கேட்டார். நான் தான் என சொன்னதும் நீ நிச்சயமா ஒரு படம் பண்ணிடுவப்பா அப்படினு சொன்னாரு. அந்த ஒரு வார்த்தை எனக்கு ரொம்ப இன்ஸ்பிரேஷனா இருந்துது" என பேசி இருந்தார்.
நடிகர் சிவகார்த்திகேயன் :
நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் 'அயலான்' படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று துபாயில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் இன்று தான் சென்னை திரும்பினார். தனது மனைவியுடன் விஜயகாந்த் இல்லத்திற்கு சென்று அவரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திவிட்டு வந்தார். பின்னர் கேப்டன் விஜயகாந்தின் மனைவி மற்றும் மகனை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் :
இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் - விஜயகாந்த் உறவு என்பது அத்தனை ஆத்மார்த்தமானது. எஸ்.ஏ.சியின் இயக்கத்தில் நடிகர் விஜயகாந்த் நடிப்பில் சட்டம் ஒரு இருட்டறை, வசந்தராகம், செந்தூரப்பாண்டி, சட்டம் ஒரு விளையாட்டு, சாட்சி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். விஜயகாந்த் மறைவுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த எஸ்.ஏ.சி, இன்று காலை அவரின் இல்லத்திற்கும் சென்று திருவுருவிச் படத்திற்கு அஞ்சலி செலுத்திவிட்டு வந்தார்.
நடிகர் ஆதி - நிக்கி கல்ராணி :
நடிகர் ஆதி மற்றும் அவரின் மனைவியும் நடிகையுமான நிக்கி கல்ராணி, விஜயகாந்த் மறைவு சமயத்தில் வெளிநாட்டில் இருந்ததால் அவர்களால் நேரில் வந்து இறுதி அஞ்சலியில் கலந்து கொள்ள மூடியதால் சூழல். அதனால் அவர்கள் சென்னை திரும்பியதும் இருவரும் தம்பதிகளாக விஜயகாந்த் நினைவிடத்திற்கு வந்து மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். விஜயகாந்த் குறித்து நடிகர் ஆதி பேசுகையில் "அவருடைய இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பு. அவர் ஒரு நல்ல நடிகர், அரசியல் தலைவர் என்பதை எல்லாம் கடந்து அவர் ஒரு அற்புதமான மனிதர். ஏராளமான நல்ல விஷயங்களை செய்துள்ளார். அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை இருப்பினும் என்னுடைய அரவான் திரைப்படம் வெளியான போது அவரே எனக்கு போன் செய்து நீ ரொம்ப கஷ்டப்பட்டு நடிச்சு இருக்க தம்பி என என்னை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார். அவருடைய ஆத்மா சாந்தி அடைய வேண்டும்.
நடிகர் எம்.எஸ். பாஸ்கர் :
நடிகர் எம்.எஸ். பாஸ்கர், விஜயகாந்த் நினைவிடத்திற்கு வந்து கதறி அழுது மனம் உடைந்து அஞ்சலி செலுத்தினார். சிறிது நேரம் சமாதியிலேயே உட்கார்ந்து மௌன அஞ்சலி செலுத்தினார்.