தமிழ் சினிமாவில் முக்கியமான காலக்கட்டம் என கூறப்படும் 80-90 களில் கோலோச்சிய நகைச்சுவை நடிகராக இருந்தவர் நடிகர் கவுண்டமணி. இவரது நையாண்டி கலந்த நகைச்சுவை சீன்களுக்கு இன்றளவும் நிறைய ரசிகர் பட்டாளம் உள்ளன. கவுண்ட மணி இயல்பாகவே , ஷூட்டிங் ஸ்பாட்டிலும் நக்கலடிக்கும் சுபாவம் உடையவராம் , தகுந்த நேரத்தில் கவுண்டர் கொடுப்பதாலேயே இவருக்கு கவுண்டர் மணி என்ற பெயர் வந்து பிறகு கவுண்ட மணி என மாறியதாகவும் கூறப்படுகிறது. கவுண்ட மணி சில படங்களில் கதாநாயகனாக நடித்தார். அதன் பிறகு சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் காட்டவில்லை. கவுண்டமணி நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வாய்மை என்ற திரைப்படம் வெளியானது. அதற்கு பிறகு அவர் திரைப்படங்களில் நடிக்கவில்லை. கவுண்டமணி பொதுவாக சினிமா விட்டு மட்டுமல்ல பிரபலங்களை சந்திப்பது, ஊடகங்களை சந்திப்பது, ரசிகர்களை சந்திப்பது என அனைத்திலிருந்தும் சற்று விலகியேதான் இருக்கிறார்.
ஆனால் நடிகர் சிவகார்த்திகேயனை சந்திப்பதை மட்டும் வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்தில் நடிகர் கவுண்டமணியை சந்தித்துள்ளார். அது குறித்த புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்ட சிவகார்த்திகேயன் “ லெஜெண்ட்டுடன்... நிறைய கேளிகள் நிறைந்த இந்த நாள் என்றென்றும் நினைவில் இருக்கும் ” என பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் “சீனியர் நடிகர்கள் நீங்கள் மதிக்கும் விதத்தை கண்டு பெருமையாக உள்ளது “ என சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
யாரையும் சந்திக்க விரும்பாதவர் கவுண்டமணி , ஏன் சிவகார்த்திகேயனை மட்டும் சந்திக்க ஆர்வம் காட்டுகிறார் என்ற கேள்வியை ரசிகர்கள் தொடந்து முன் வைத்து வருகின்றனர். சிவகார்த்திகேயனின் நகைச்சுவை கலந்த பேச்சு இயல்பாகவே கவுண்டமணிக்கு பிடித்து போனதாம். மேலும் குடும்பத்தின் மீது சிவகார்த்திகேயனுக்கு இருக்கும் ஈடுபாட்டை எப்போதும் மெச்சுவாராம் கவுண்டமணி.அதுமட்டுமல்லாமல் தொலைக்காட்சியில் ஸ்டாண்டப் காமெடி மூலம் அறிமுகமாகி, இன்று சிவகார்த்திகேயன் கட்டி எழுப்பியிருக்கும் சாம்ராஜ்யம் அவரின் கடின உழைப்பாலும் திறமையாலும் உருவானது. இதுவும் சிவாவை கவுண்டமணிக்கு பிடிப்பதற்கான காரணங்களுள் ஒன்று. கவுண்டமணி நடிப்பில் உருவான 49-ஓ என்ற திரைப்படத்தின் விழாவிற்கு சிவகார்த்திகேயனுக்கு மட்டும் தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுத்ததாகவும் சில அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றனர். அந்த அளவிற்கு கவுண்டமணிக்கும் சிவகார்த்திகேயனுக்குமான பிணைப்பு உள்ளது.