செப்டம்பர் 5 வெளியாகும் மதராஸி
சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் கடந்த ஆண்டு மிகப்பெரிய வசூல் வெற்றிபெற்றது. மேஜர் முகுந்தின் வாழ்க்கையைத் தழுவி உருவான இப்படத்தில் முழு ஆக்ஷன் ஹீரோவாக சிவகார்த்திகேயன் நடித்து மக்களிடம் வரவேற்பைப் பெற்றார். வசூல் ரீதியாக இப்படம் உலகளவில் ரூ 328 கோடி வசூல் செய்தது. இப்படத்தைத் தொடர்ந்து தற்போது வெளியாக இருக்கும் மதராஸி படத்திலும் முழு ஆக்ஷன் அவதாரத்தில் தோன்ற இருக்கிறார் எஸ்.கே. செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாக இருக்கும் மதராஸி படத்திற்கு ரசிகர்களிடையே பெரியளவில் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது
ஶ்ரீ லக்ஷ்மி மூவிஸ் தயாரிப்பில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கியுள்ள படம் மதராஸி. சிவகார்த்திகேயன் , ருக்மினி வசந்த் , வித்யுத் ஜம்வால் , பிஜூ மேனன் , விக்ராந்த் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ளார். தீனா , கஜினி , துப்பாக்கி , கத்தி என பக்கா ஆக்ஷன் ஹிட் படங்களை கொடுத்த முருகதாஸ் மதராஸி படத்தில் மீண்டும் ஆக்ஷனுக்கு திரும்பியிருக்கிறார். சிவகார்த்திகேயனின் கரியரை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லும் படமாக மதராஸி இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்து வருகிறது. இப்படத்தின் திரையரங்க ரிலீஸ் உரிமை பெரிய தொகைக்கு விற்பனையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
மதராஸி திரையரங்க விநியோகம்
மதராஸி படத்தின் திரையரங்க விநியோகஸ்த உரிமையை வேல்ஸ் ஃபிலிம்ஸ் சார்பாக ஐசரி கணேஷ் பெற்றுள்ளார். மினிமம் காரண்டி அடிப்படையில் இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமையை 40 கோடிக்கு வாங்கியுள்ளார். நேரடியாக படத்தை விநியோகிக்காமல் ரெட் ஜெயண்ட் மூவிஸ் மூலமாக படத்தை வெளியிட இருக்கிறார் ஐசரி கணேஷ். படத்தின் வசூலில் இதில் ரெட் ஜெயண்ட் நிறுவனத்திற்கும் ஒரு பங்கு சேரும் என இந்த ஒப்பந்தத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.