சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடன் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. ஶ்ரீ லக்ஷ்மி மூவிஸ் தயாரித்துள்ள இப்படத்தை ஏ.ஆர் முருகதாஸ் இயக்கியுள்ளார். ருக்மினி வசந்த் , வித்யுத் ஜம்வால் , விக்ராந்த் , பிஜூ மேனன் , ஷபீர் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ளார். திரையரங்கில் வெளியாகி வெற்றி பாதையை நோக்கி செல்லும் மதராஸி படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
கம் பேக் கொடுத்த முருகதாஸ்
இந்த ஆண்டு ஷங்கர் , மணிரத்னம் , லோகேஷ் கனகராஜ் என தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குநர்கள் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்துள்ளார்கள். அஜித்தின் தீனா தொடங்கி , ரமனா , கஜினி , துப்பாக்கி , கத்தி , 7 ஆம் அறிவு என பல சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் தர்பார் படத்தில் தொடங்கி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறார். அண்மையில் இந்தியில் அவர் இயக்கிய சிகந்தர் திரைப்படமும் தோல்வியை சந்தித்தது. இப்படியான நிலையில் மதராஸி படத்தின் மூலம் செமையான கம்பேக் கொடுத்துள்ளார் ஏ. ஆர் முருகதாஸ். ஆக்ஷன் , ரொமான்ஸ் என இரண்டை சரியாக பேலன்ஸ் செய்து இளைஞர்களுக்கும் ஃபேமிலி ஆடியன்ஸையும் கவரும் விதமாக மதராஸி படம் அமைந்துள்ளது
மதராஸி முதல் நாள் வசூல்
சிவகார்த்திகேயன் நடித்து கடந்த ஆண்டு வெளியான அமரன் திரைப்படம் தமிழ் மட்டுமில்லாமல் பிற மொழிகளிலும் மிகப்பெரிய வெற்றிபெற்றது. உலகளவில் அமரன் திரைப்படம் ரூ 300 கோடிக்கும் மேல் வசூலித்தது. இதனால் மதராஸி படத்தின் மீதும் வசூல் ரீதியாக பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அமரன் படத்தைக் காட்டிலும் மதராஸி படத்தின் முதல் நாள் வசூல் குறைவே என்றாலும் அடுத்தடுத்த நாட்களில் படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம். மதராஸி திரைப்படம் முதல் நாளில் இந்தியளவில் ரூ 13 கோடி வசூலித்துள்ளதாக சாக்னிக் தளம் தகவல் வெளியிட்டுள்ளது.
மதராஸி ஓடிடி ரிலீஸ்
மதராஸி திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமத்தை அமேசான் பிரைம் நிறுவனம் வாங்கியுள்ளது. திரையரங்கில் 4 வாரங்களுக்குப் பின் இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். படத்திற்கு திரையரங்கில் பெரியளவில் வரவேறு இருக்கும்பட்சத்தில் ஓடிடி ரிலீஸ் இன்னும் சில வாரங்கள் ஒத்திவைக்கப்படலாம்