தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக உயர்ந்த்திருப்பவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் நேற்று முன்தினம் வெளியான திரைப்படம் மதராஸி. பிரபல திரைப்பட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இந்த படம் உருவாகியுள்ளது.
மதராஸி கலெக்ஷன் எவ்வளவு?
பக்கா கமர்ஷியல் திரைப்படமாக இந்த படம் வெளியாகியுள்ளது. இந்த படம் முதல் நாள் ரூபாய் 13 கோடி வசூல் செய்த நிலையில், நேற்று படத்திற்கு வரவேற்பு எப்படி? என்பதை கீழே காணலாம். மதராஸி படம் நேற்று மட்டும் ரூபாய் 11.75 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
முதல் நாள் வசூலுடன் ஒப்பிடும்போது நேற்று படத்தின் வசூல் குறைவு ஆகும். கடந்த இரண்டு நாட்களில் மட்டும் இந்திய அளவில் மதராஸி 25.40 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. நேற்று மதராஸி படத்திற்கு மாலைக் காட்சிக்கும், இரவுக்காட்சிக்கும் ரசிகர்கள் அதிகளவு குவிந்தனர்.
ஹவுஸ்ஃபுல்லா?
மாலை காட்சியில் 61.02 சதவீதமும், இரவுக்காட்சியில் 74.27 சதவீதமும் ரசிகர்கள் திரண்டனர். காலை காட்சியில் 34.49 சதவீதமும், மதிய காட்சியில் 59.84 சதவீதமும் திரண்டனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் சென்னையில் நேற்று ரசிகர்கள் கூட்டம் அதிகளவு காணப்பட்டது.
சென்னையில் மட்டும் 73.75 சதவீதம் அரங்குகள் நிறைந்த காட்சிகளாக ஓடியது.மதுரையில் 47 சதவீதமும், கோவையில் 59.75 சதவீதமும், பாண்டிச்சேரியில் 58.75 சதவீதமும், சேலத்தில் 52.75 சதவீதமும், வேலூரில் 50 சதவீதமும், திண்டுக்கல்லில் 57.50 சதவீதமும், கொச்சியில் 48.50 சதவீதமும் அரங்குகள் நிறைந்த காட்சிகளாக ஓடியது.
காட்சிகள் அதிகரிப்பு:
சென்னையிலும், கோவையிலும் நேற்று காட்சிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 593 காட்சிகளும், கோவையில் 211 காட்சிகளும் ஓடியது. சென்னையில் முதல் நாள் 587 காட்சிகளும், கோவையில் 206 காட்சிகளும் ஓடிய நிலையில் திரையரங்கம் அதிகரிக்கப்பட்டுள்ளது. தெலுங்கிலும் மதராஸி படம் ஓரளவு வரவேற்பை பெற்று வருகிறது. தெலுங்கில் ஹைதரபாத் நகரில் 249 காட்சிகள் நேற்று மட்டும் திரையிடப்பட்டது.
கம்பேக் தந்த ஏ.ஆர்.முருகதாஸ்:
மதராஸி படத்திற்கு சிலர் சமூக வலைதளங்களில் விமர்சனங்களை முன்வைத்தாலும், ஆக்ஷன் காட்சிகள் உள்பட படம் கமர்ஷியல் படமாக இருப்பதாக பலரும் பாராட்டி வருகின்றனர். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் இன்று படத்திற்கு நல்ல கூட்டம் வரும் என்று படக்குழு நம்புகிறது. தொடர் தோல்வியில் துவண்டிருந்த ஏ.ஆர்.முருகதாஸிற்கு இந்த படம் மீண்டும் ஒரு கம்பேக் படமாக அமைந்துள்ளது.
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மிணி நடித்துள்ளார். வித்யுத் ஜம்வால் வில்லனாக நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். ஸ்ரீலட்சுமி மூவி மேக்கர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.
அமரன் படத்தின் முதல் நாள் வசூல் அளவிற்கு மதராஸி படம் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அமரன் படம் உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட படம் என்பதாலும், அது கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பு என்பதாலும் மிகப்பெரிய அளவு ப்ரமோஷன் செய்யப்பட்டது. ஆனால், அமரன் படத்துடன் ஒப்பிடும்போது இந்த படத்திற்கு ப்ரமோஷன் குறைவு ஆகும். 180 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படத்தை பட்ஜெட்டை கடக்குமா? என்பது இன்னும் சில நாட்களில் தெரிய வரும்.